கோட்டாபயவிற்கு எந்த நாடும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் (Photos)
போர்க்குற்றவாளியான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எந்த நாடும் அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை விசேட செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
”இலங்கையில் இருந்து தப்பி ஓடிய ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எந்த நாடும் அகதி அந்தஸ்து கொடுத்து வாழ்வதற்கு இடம்கொடுக்க வேண்டாம்.
இறுதி யுத்தத்தின் போது எமது உறவுகளை இவர்களிடம் தான் ஒப்படைத்திருந்தோம். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அன்றிலிருந்து இன்று வரை கேட்டு கொண்டிருந்தாலும், இன்றும் பதில் கிடைக்காமலே இருக்கின்றது.
எமது உறவுகளை காணாமல் ஆக்கிய ராஜபக்ச குடும்பத்திற்கு எவரும் ஆதரவு அழிக்க வேண்டாம். இன்று எமது உறவுகளை காணாமல் ஆக்கிவிட்டு தற்போது அவர்களும் காணாமல் ஆக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து மேலும் கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர் அழகேஸ்வரி குறிப்பிட்டுள்ளதாவது,
"நாங்கள் 50 வீதம் ஆனந்தமாகவும் 50 வீதம் கவலையாகவும் தான் இருக்கின்றோம். ஏனெனில், 12 வருடங்கள் நாங்கள் போராடியமைக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
வயது சென்று கொண்டு இருக்கின்ற இந்த நிலையில் இனியும் எம்மால் போராட முடியாது. எதிர்கால ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எமது விடயத்தில் தலையிட்டு தீர்வினை பெற்று தர வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
மீண்டும் ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சிக்கு வருவார்களா?

மக்கள் போராட்டத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி வெளியேற்றப்பட்டதை நாம் வரவேற்கின்றோம். மேலும், கோட்டபாய துரத்தப்பட்டுள்ளமை எமக்கு ஒரு சந்தோசத்தை கொடுத்தாலும், மீண்டும் அவர்கள் தான் வருவார்களா என்ற சந்தேகமும் எமக்குள்ளது.
இந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர், சர்வதிகார போக்குடன் தமிழர்களின் பூர்விக இடங்களை அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார்கள் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க ஆலோசகர் தாமோதரம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”இதன் விளைவாக அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பல பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டிருந்தன. வடகிழக்கிலும் இவ்வாறான நிலைமை தொடர்கின்றது.
எனவே, இறுதியுத்த மனித உரிமை மீறல் செயற்பாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதிக்கு எந்த நாடும் அடைக்கலம் கொடுக்க கூடாது” என இவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
| தமிழ் மக்களுக்காக முன்வைத்துள்ள பத்து அம்ச கோரிக்கைகள்: நிசாந்தன் |