தொடர் சிக்கலில் கோட்டாபய! சிங்கப்பூர் அரசாங்கம் விதித்துள்ள காலக்கெடு
கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம் என கருதி இவ்வாறு 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
15 நாட்களுக்குள் கோட்டாபய வெளியேற வேண்டும்
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக கோட்டபாய ராஜபக்ச மாலைதீவுக்கு தப்பி சென்றதுடன் பின் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.
அங்கு அவரது நண்பர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்சவை நேற்று சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர் காசிவிஸ்வநாதன் சண்முகம், சிங்கப்பூர் அரசால் இனி பாதுகாப்பு அளிக்க முடியாது எனவும், நாட்டை விட்டு 15 நாட்களுக்குள் வெளியேறும்படி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏலவே கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சிங்கப்பூரில் கோ ஹோம் கோட்டா எதிர்ப்பலைகள், கோஷங்கள் ஒலிக்க ஆரம்பித்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு சிங்கப்பூரில் அடைக்கலம் வழங்கப்படவில்லை, தனிப்பட்ட விஜயமாகவே வந்துள்ளதாக சிங்கப்பூர் அரசு ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே பாதுகாப்பு காரணங்களை கூறி கோட்டாபய ராஜபக்சவை 15 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி கூறப்பட்டுள்ளது.
இதேநேரம் சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய ராஜபக்ச சவூதி செல்வார் என கூறப்பட்ட போதும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் சிங்கப்பூரிலேயே தங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்திய அரசு மறுத்துவிட்டது என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலதிக தகவல்கள் - ராகேஷ்