இறுதி நேரத்தில் தோற்றுப்போன கோட்டாபயவின் திட்டங்கள்! கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன... வெளியான புதிய தகவல்கள்
இலங்கையர்கள் நாட்டை விட்டுச் செல்ல காரணமாக இருந்த கோட்டாபயவும், நாட்டை விட்டுச்சென்றார்.
மாற்றப்பட்ட திட்டங்கள்
இந்தநிலையில் ஹஜ் யாத்திரிகர்களுடன் சவுதியா விமானம் அவரை மாலேயில் இருந்து சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லும் வரை திட்டங்கள் மாறிக்கொண்டே இருந்தன.
இலங்கையின் ஜனாதிபதி மாளிகையின் வாயிலில் போராட்டக்காரர்கள் இருந்தபோதும், பாதுகாப்புப் படைத் பிரதானிகளுடன் வெளியேறும் உத்திகள் குறித்து அவர் விவாதித்துக் கொண்டிருந்தார்.
இலங்கையின் நெருக்கடியால் பலரும் வெளிநாடுகளுக்கு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கையின் ஜனாதிபதிக்கும் அதேநிலை கடந்த வாரம் ஏற்பட்டது.
விதியின் ஒரு விசித்திரமான விந்தையால் கடந்த வாரம் வெளிநாட்டுக்கு செல்வது அவரின் முறையாக மாறியது. மிரிஹானவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லம் ஏப்ரல் மாதம் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டதிலிருந்து அவர் மெய்நிகர் தனிமையில் வாழ்ந்து வந்தார்.
இறுதியில் தன்னை வெளியேற்ற முயன்ற பெரும்பாலான இலங்கையர்களிடம் இருந்து அவர் தப்பியோடியுள்ளார்.
தீட்டப்பட்ட திட்டம்
ஜூலை 14, வியாழன் அன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான யுஎல் 225 இல் அவரும் அவரது மனைவி அயோமா உட்பட ஒரு குழுவும் துபாய் செல்ல திட்டமிட்டிருந்தனர். அது மாலை 6.25 மணிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தது.
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஜூலை 9 சனிக்கிழமையன்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து பின்வாங்கிய ஜனாதிபதி ராஜபக்ச ஏற்கனவே ஹெலிகாப்டரில் கொழும்பு வந்திருந்தார். இதன் பின்னரே அவர் வெளியேறும் திட்டம் தயாரிக்கப்பட்டது.
ஜூலை 12, செவ்வாய்கிழமை இரவு அவர் புறப்படவிருக்கும் செய்தி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் தொழிற்சங்கங்களின் விமானிகளுக்கு எட்டியது. இதன்போது ஜனாதிபதியையும் அவரது பரிவாரங்களையும் தங்கள் விமானத்தில் ஏற்றிச் செல்ல அந்த இரண்டு தரப்பினரும் மறுத்துவிட்டனர்.
இதன்போது அமைச்சர் டிரன் அலஸ் மற்றும் ஜனாதிபதியின் நண்பரான அருண பெர்னாண்டோ ஆகியோர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகேவிடம் உதவி கோரினர்.
பெர்னாண்டோ, ஜனாதிபதி ராஜபக்சவின் வியத் மக (தொழில் வல்லுனர்களின் அமைப்பு) உறுப்பினர் ஆவார் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(எஸ்எல்பிபி) சார்பில் தேர்தலில் கொழும்பு வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
இந்தநிலையில், அவர் முயற்சி பார்த்துவிட்டு விமானிகளையோ அல்லது அவரது ஊழியர்களையோ வற்புறுத்த முடியாது கைவிரித்து விட்டார்.
இதனால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பறக்க முடியாத நிலை கோட்டாவின் குழுவினருக்கு ஏற்பட்டது. அத்துடன் குறித்த விமானத்தில் பயணிக்கவிருந்த ஒரு பயணி ஒருவர், விமானத்தில் இருந்த மற்றவர்களும் சேர்ந்து ஜனாதிபதியையும் பரிவாரத்தின் அனைத்து உறுப்பினர்களையும் தாக்குவார்கள் என்று எச்சரித்தார்.
இதன் பின்னர் ஜனாதிபதியின் உதவியாளர்கள் எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில், ஜனாதிபதி ராஜபக்ச மற்றும் அவரது குழுவை முன்பதிவு செய்ய முயன்றனர். அது அதே இரவு 9.20 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட இருந்தது.
உதவி கோரிய கோட்டாபய
இந்த நேரத்தில், ஜனாதிபதி ராஜபக்ச, இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறுவதற்காக, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் உதவியை நாடினார். முப்படைகளின் தலைவர் தளபதி என்பதால் அவசர அவசரமாக, அவர் விமானப்படை விமானத்தை கிடைக்கச் செய்தார். அப்போது ஜூலை 13 ஆகிவிட்டது.
முதலில் கடமையில் இருந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், விமானப்படையின் விமானம், தரையிறங்குவதற்கான அனுமதியை மறுத்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பின்னர் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து மாலேக்கு அழைத்துச்செல்லப்பட்ட கோட்டாபய குழுவினர், பலத்த பாதுகாப்புடன் கிரிபுஷி தீவில் தங்க வைக்கப்பட்டனர். ஜனாதிபதி ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் மிக உயர்ந்த பாதுகாப்பு சூழலை கொண்டிருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அன்றைய தினம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. எனினும் கொழும்பில் இருந்து வரும் சிங்கப்பூருக்கு எந்த விமானத்திலும் ஏற விரும்பவில்லை என்று ராஜபக்ச தனது உதவியாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.
விமான நிலையத்தில் காத்திருந்த குழுவினர்
அவர் தனது பாதுகாப்பு விடயத்தில் பயத்தைக் கொண்டிருந்தார். இந்த விமானத்திற்காக தொலைக்காட்சி குழுவினரும் ஊடகங்களும் சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
எனினும் இறுதி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டது. துபாயில் ஏற்கனவே வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த இளம் உறுப்பினர் ஒருவர், சிங்கப்பூர் செல்வதற்கு தனியார் ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்வதாக ஜனாதிபதி ராஜபக்சவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
அதனால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறாமல், தனியார் விமானம் வரும் வரை கோட்டாபய காத்திருந்தார். உத்தரவாதத்திற்கு மாறாக, அது கிடைக்கவில்லை. இதனையடுத்து, அவர் மாலேயில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஒரே சவுதியா (முன்னர் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் என்று அழைக்கப்பட்டது) விமானத்தில் புறப்பட முடிவு செய்தார்.
இந்த விமானம் மாலேயில் இருந்து முற்பகல் 11.30 மணிக்கு புறப்பட்டது. ஹஜ் யாத்திரை முடிந்து மாலே மற்றும் சிங்கப்பூரில் இறங்குவதற்காக ஏராளமான யாத்ரீகர்களை அது அழைத்து வந்தது. இதன்போது,சில காரணங்களால், ஜனாதிபதி ராஜபக்ச மற்றும் அவரது பரிவாரங்கள் வரவில்லை என்ற தகவல் சாங்கியில் காத்திருந்த சர்வதேச ஊடகவியலாளர்கள் மத்தியில் பரவியது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சேனல் நியூஸ் ஏசியா (சிஎன்ஏ) கூட இந்த தகவலை பெற்றிருந்தது. எனினும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட இரண்டு வாக்கிய அறிக்கையில் கோட்டாபயவின் வருகை உறுதிப்படுத்தப்பட்டது. அதில், 'இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 'தனிப்பட்ட பயணமாக' சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது.
பதவி விலகலை அறிவித்த கோட்டாபய
எந்த அடைக்கலத்தையும் கேட்கவில்லை, வழங்கப்படவில்லை என்றும் அமைச்சகம் குறிப்பிட்டது. சிங்கப்பூர் சென்றவுடன் கோட்டாபயவின் முதல் பணியாக, சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஷஷிகலா பிரேமவர்தன முன்னிலையில் புதிய பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டு அதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
இது அதன் நம்பகத்தன்மையில் ஒரு ஆரம்ப சிக்கலை உருவாக்கியது. இதனையடுத்து கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தொலைபேசி அழைப்புகளின் பின்னர், உயர் ஸ்தானிகர் பிரேமவர்தன தனது ஊழியர்களில் ஒருவர் மூலமாக அசல் கடிதத்துடன் கொழும்புக்கு அனுப்பப்பட்டார்.
அதன் பின்னரே சபாநாயகர் அபேவர்தன வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதி பதவி விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
தோற்றுப்போன கோட்டாபயவின் நம்பிக்கை
முன்னதாக ஜூலை 9ஆம் திகதியன்று, ஜனாதிபதி மாளிகையின் மேல் தளத்தில் ஜனாதிபதி ராஜபக்ச இருந்தார். அவர் காலை உணவை முடித்திருந்தார்.
தரை தளத்தில் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர டி சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகியோர் இருந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச படிக்கட்டுகளில் இருந்து இறங்கிய பின்னர் படையதிகாரிகளுடன் நிலைமை தொடர்பில் விவாதித்தார். கண்ணீர் புகை மற்றும் நீர் தாரையைப் பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க முடியும் என ஜனாதிபதி ராஜபக்ச விரும்பினார்.
எனினும், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர் மற்றும் இரத்தக்களரி மற்றும் அதன் விளைவாக கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதை அவர்கள் விரும்பவில்லை.
ஜனாதிபதி ராஜபக்ச, தந்திரோபாயமாக வெளியேறி நிலைமையை சமாளிப்பதற்கு அனுமதிப்பது மிகவும் பொருத்தமானது என்று அவர்கள் கருதினர். அப்போது, போராட்டக்காரர்கள், தெருவில் உள்ள தடுப்புகளை வெற்றிகரமாக உடைத்துக்கொண்டு ஜனாதிபதி மாளிகை நோக்கி வந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்தது.
இதனையடுத்து ஜனாதிபதி ராஜபக்ச, பாதுகாப்புத் தலைவர்களின் ஆலோசனைக்கு செவிசாய்த்து, விரைவாக வெளியேறவும், இதனால் இரத்தக்களரியைத் தடுக்கவும் இணங்கினார். பைகள் அவசரமாக பொதி செய்யப்பட்டன. அவரும் மனைவி அயோமாவும் கடற்படைத் தலைமை வைஸ் அட்மிரல் உலுகெதென்னாவின் உத்தியோகபூர்வ வாகனத்தில் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு சிங்களப் போர்வீரரின் பெயரிடப்பட்ட (இலங்கை கடற்படைக் கப்பல்) கஜபாகு நிறுத்தப்பட்டிருந்தது. இது அமெரிக்காவின் கடலோர காவல்படையின் கடல் ரோந்து கப்பலாகும். இது, இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்டதாகும். இதில் ஹெலிகாப்டரை தரையிறக்கும் வசதி உள்ளது.
இந்த கடற்படை கப்பலில் கோட்டாபயவும் மனைவியும் ஏற்றப்பட்ட பின்னர் அந்த கப்பல் திருகோணமலைக்கு சென்றதா? அல்லது கடற்பரப்பிலேயே அங்கு நங்கூரமிட்டிருந்ததா? என்பது இதுவரை வெளியாகாத தகவலாக உள்ளது.
இந்த காலக்கட்டத்திலேயே கோட்டாபய, சபாநாயகர் மகிந்த அபேவர்த்தனவுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தமது பதவி விலகலையும் அறிவித்திருந்தார்.