பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே கோட்டாபயவிற்கு சென்ற எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே, நிதியமைச்சின் அதிகாரிகள் இலங்கையின் மோசமான நிதி நிலைமை குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்க தொடங்கினர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலானது 2020,மே 13, திகதியிட்ட அமைச்சரவை குறிப்பிலேயே பதிவிடப்பட்டுள்ளது.
இதன்போது அவர்கள், ஏற்றுமதி மற்றும் பணம் அனுப்புதல் ஆகிய இரண்டு அம்சங்களும் குறைந்தது 50 சதவீதம் சரிவடையும் எனவும் எச்சரித்துள்ளனர்.
நிதியமைச்சின் அதிகாரிகள் எச்சரிக்கை
கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார மந்த நிலையின் கணிப்புகளை கருத்தில் கொண்டு இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக நிதியமைச்சின் அதிகாரிகள்,“சுற்றுலாத்துறையின் மூலம் வெளிநாட்டு நாணய வரவில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படும்.
அத்துடன் ஏற்றுமதி மற்றும் பணம் அனுப்புதல் என்பவற்றிலும் வீழ்ச்சி ஏற்படும்”என்றும் எச்சரித்துள்ளனர்.
மேலும், இது நிச்சயமாக வெளிநாட்டு நாணய கையிருப்பில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை உருவாக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்போது இலங்கையின் வெளிநாட்டு இருப்பு சுமார் 7.1 பில்லியன் டொலர்களாக இருந்ததாக பதிவுகள் கூறுகின்றன.
நிதியமைச்சின் வெளிவிவகார திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணத்தில் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ச கையொப்பம் இட்டுள்ளார்.
2020 மே-டிசம்பர் காலப்பகுதியில் மட்டும், சர்வதேச இறையாண்மை பத்திரங்களை திருப்பி செலுத்துதல் மற்றும் பலதரப்பு முகவர்களின் உத்தியோகபூர்வ கடன் உட்பட வெளிநாட்டு நாணய கடனில் கிட்டத்தட்ட 3.3 பில்லியன் டொலர்களை திருப்பி செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கோட்டாபயவின் தோல்விக்கான காரணம்
அரசாங்கத்திடம் உட்கட்டமைப்பு மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான எந்த திட்டமும் அப்போது இல்லை என்று பதிவுகள் காட்டுகின்றன.
அப்போதைய அரசாங்கம் அந்த பதிவுகள் தொடர்பில் கருத்தில் கொள்ளவில்லை. அதுவே கோட்டாபயவின் தோல்விக்கான காரணம் என உள்ளூர் நாளிதழ் ஓன்று சுட்டிக்காட்டியுள்ளது.