கம்மன்பிலவுக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் வழக்கை திசைதிருப்ப உதய கம்மன்பில முயற்சிப்பதாக அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சட்டத்தரணி அச்சலா நேற்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, "உலுகேதென்னவினால் கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் தொடர்ச்சியாக கம்மன்பில பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து கருத்து தெரிவித்து வருகின்றார்.
கடத்தல் விவகாரம்
கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் முப்படை அதிகாரிகளின் பிள்ளைகளும் அடங்கியுள்ளனர். குறித்த பிள்ளைகளின் பெற்றோர்களும் என்னுடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வந்திருந்தனர்.
அதில் மூவினத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். கம்மன்பிலவின் சில கருத்துக்கள் இனவாதத்தை தூண்டி குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அத்தோடு அவர் இந்த வழக்கு தொடர்பில் 2017ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல கருத்துக்களை கூறி வழக்கை திசைதிருப்ப முனைகிறார்.
இந்த வழக்கு பொல்கஹாவெல நீதிமன்றத்தில் நடைபெற்ற போதும் அவரின் கருத்துக்களால் சாட்சியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. அவ்வாறான நிலை கொழும்பில் நடைபெறும் வழக்கிலும் ஏற்படக் கூடாது என்பதே எமது நோக்கமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பு முகாம்
பொதுஹெர பகுதியில் நபரொருவரை கடத்தி, கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைய உலுகேதென்ன கைது செய்யப்பட்டார்.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபரான நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டதுடன் கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பில் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட நபர் பல நாட்களுக்கு பின்னர் சட்டவிரோத தடுப்பு முகாமிலிருந்து அனுப்பிய கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Foot Massge: வெறும் 5 நிமிடம் பாதங்களை மசாஜ் செய்து பாருங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! Manithan
