மாகாண சபைத் தேர்தலுக்கான அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை!
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் முறைமையைத் தீர்மானிக்க நாடாளுமன்றத்தில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமையை வரவேற்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விசேட செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்து ஆராய்ந்து விதப்புரைகளை வழங்க இந்தச் செயற்குழுவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள், இக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த அறிக்கை கிடைத்தவுடன், சட்ட ரீதியான அதிகாரத்தைப் பயன்படுத்தித் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்போம்.
பழைய முறையா அல்லது புதிய முறையா என்ற குழப்பத்துக்கு நாடாளுமன்றமே தீர்வு காண வேண்டும் என உயர்நீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விசேட செயற்குழுவில் எமது ஆணைக்குழுவின் சார்பிலும் ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைக்கவுள்ளோம்.
மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை விரைவில் நியமிக்க வேண்டும் என்பதில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியாக உள்ளது.
அரசு எடுக்கும் சாதகமான தீர்மானங்களுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.