எமது போராட்டத்தினை நசுக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டு
"எமது போராட்டத்தினை நசுக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்" என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டுகின்றனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகரங்சினி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த அரசாங்கம் தற்பொழுது இருக்கின்ற பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கி பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை உருவாக்கி இனப்படுகொலை செய்யப்பட்டு எஞ்சிய மக்களை கடத்தவும், காணாமல் போக செய்வதற்குமாக குறித்த சட்டத்தை உருவாக்க தற்போதைய அரசாங்கம் முயல்கி்றது.
ஜனநாயக ரீதியான போராட்டம்
இந்த புதிய சட்டத்தால் எங்களுடைய ஜனநாயக ரீதியான போராட்டம் எங்களுக்கு நீதி கோருகின்ற பேரணிகள், ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் சுயாதீனமாக இயங்குகின்ற ஊடகங்கள் கூட எமது பிரச்சினைகளை அடையாளம் கண்டு வெளிக்கொண்டு வர முடியாத அளவிற்கு குறித்த சட்டம் அமையப்போவதாக நாங்கள் அறிகின்றோம்.
வடக்கு கிழக்கிலே வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஆபத்தான சட்டமாகதான் நாங்கள் பார்க்கின்றோம். இந்த சட்டத்தை வர்த்தமானி ஊடாக அரசாங்கம் கொண்டுவருவதற்கு முயன்றால் அதனை நாங்கள் எதிர்க்கின்றோம்.
நீதி
பாதிக்கப்பட்ட தாய்மாராகிய எமக்கு இதுவரை நீதி கிடைக்காதபோதும், நாங்கள் சர்வதேசத்தின் ஊடாக நீதி வேண்டி நிற்கின்றோம். இலங்கை அரசினால் ஒருபோதும் எங்களிற்கான நீதி கிடைக்கப்போவதில்லை.
ஒட்டுமொத்தமாக வட கிழக்கு தழிழர்களிற்கான சுய உரிமையும் கிடைக்கப்போவதில்லை. தமிழ் அரசியல்வாதிகளு்ம, ஏனைய சகோதர இனத்து அரசியல்வாதிகளும் இந்த சட்டத்தை எதிர்த்து இல்லாது ஒழிக்க வேண்டும் என கேட்டு நிற்கின்றோம். அரசாங்கம் எக்காரணம் கொண்டும் குறித்த சட்டத்தை கொண்டு வரக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிக்க இருக்கின்றோம்.
உண்மையாக எமது நியாயமான போராட்டங்களை நசுக்குவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வருகின்றார்கள். ஆகையால் இந்த சட்டத்தை வன்மையாக கண்டித்து எதிர்த்து நிற்கின்றோம். இதை யாருமே ஏற்றுக்கொள்ளக்கூடாது.
நாடாளுமன்றம் செல்கின்றவர்கள், அங்கு பேசுபவர்கள், சகோதர இனத்தவர்கள் கூட இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம். ஜனநாயக ரீதியில் இடம்பெற்ற எமது போராட்டகள் ஊடக வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் நாங்கள் வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம்.
இங்கே இன அழிப்பு செய்யப்பட்டமை, லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற விடயங்களைக்கூட சமூக வலைத்தளங்கள் ஊடாகதான் சர்வதேச மட்டத்திற்கு வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம்.
இந்த சட்டம் நடைமுறைக்கு வருமாக இருந்தால், ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் முடக்கி அவர்கள் எம்மோடு பயணிக்க முடியாத அளவிற்கு இந்த சட்டம் கொண்டுவரப்படும் என நாங்கள் அறிந்திருக்கின்றோம்.
மரண தண்டனை
இப்படியான விடயங்களை அவர்கள் வெளிக்கொண்டு வரும்போது, அவர்களை கைது செய்து மரண தண்டனைக்குள்ளாக்குகின்ற விடயங்கள் கூட நடக்கும் என்று நாங்கள் அறிகின்றோம்.
ஆகவேதான் நாங்கள் இதை முற்றாக நிராகரிக்கின்றோம். நாங்கள் எமது போராட்டத்தை சர்வதேச மட்டத்தில் போராடிக்கொண்டிருக்கின்றபோது, அரச கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற தொழிற்சங்கங்கள்கூட எமது நீதிக்கான போராட்டங்களில் கலந்து கொள்கின்றார்கள். அவ்வாறு கலந்து கொள்பவர்களும் கைது செய்யப்பட்டு தண்டனைக்குட்படுத்துவார்கள் என பேசப்படுகின்றது.
அதனாலேதான் உயிருக்கு மேலாக கருதி முன்னெடுக்கும் எமது
போராட்டத்தை நசுக்குவதற்காக ஒட்டுமொத்த தமிழர்களையும் அழித்து இல்லாது
ஒழிப்பதற்காகதான் இந்த அரசாங்கம் முற்படுகின்றது. ஆகவேதான், இந்த சட்டத்தை
கொண்டுவர முனைப்பெடுக்கின்றது, இதை நாங்கள் முற்றாக நிராகரித்து
கண்டிக்கின்றோம்" என தெரிவித்தார்.