இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் தெரிவு தொடர்பில் புதிய பரிந்துரை
இலங்கை கிரிக்கெட் சபை தலைவரை தெரிவு செய்யும் போது, விளையாட்டு சங்கங்கள் தேர்தலை நடத்தக்கூடாது என இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட "நீதியரசர் சித்ரசிறி குழுவின்" அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை கடந்த (15) ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
மேலும், 18 பேர் கொண்ட கிரிக்கெட் அதிகாரிகள் சபைக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய ஐந்து வீரர்களும் சேர்க்கப்பட வேண்டும் என நீதியரசர் சித்ரசிறி குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு தோல்வியுற்ற போட்டியை நிறைவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி, வரலாற்றில் முதல் தடவையாக 20-20 உலகக்கிண்ணப் போட்டியின் முதல் சுற்றுடன் வெளியேற வேண்டியிருந்தது.
அத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கிண்ண மற்றும் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியிலும் இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, வீரர்களுக்கும், கிரிக்கட் நிர்வாகத்தினருக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, கிரிக்கெட் நிர்வாகத்தை மாற்றி கடந்த வருடம் நவம்பர் மாதம் 5ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இடைக்கால நிர்வாண சபையொன்றை நியமித்திருந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் அதற்கு இடைகால தடை விதித்திருந்தது.
அன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைச்சர்களான கஞ்சன விஜேசேகர, மனுஷ நாணயக்கார மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் அடங்கிய அமைச்சரவை உபகுழுவொன்றை ஜனாதிபதி நியமித்தார்.
நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு அனுமதி
அதாவது இலங்கையில் கிரிக்கெட் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கண்டறிந்து அது தொடர்பான பரிந்துரைகளை வழங்க வேண்டும். கிரிக்கட் தொடர்பிலான அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியதன் பின்னர் அமைச்சரவை உபகுழு பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை இவ்வருடம் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பித்தது.
அந்த பரிந்துரைகள் மூலம் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
அதன்படி, இலங்கை கிரிக்கெட்டின் அமைப்பு மற்றும் கட்டமைப்பை மறுசீரமைத்தல். தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், 19 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயதுக்குட்பட்ட பிரிவுகள் உட்பட பல்வேறு நிலைகளில் உள்ள வீரர்களின் நிர்வாகம், பயிற்சி மற்றும் நலன். இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை, தொழில்முறை, பொறுப்புக்கூறல் போன்றவற்றை ஊக்குவித்தல். திறமை, சமத்துவம் மற்றும் நியாயத்தை தழுவி பாடசாலை, மாவட்டம், மாகாண மற்றும் சமூக மட்டங்களில் கிரிக்கெட்டை சீர்திருத்துதல் போன்றவை.
இந்த அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையின் அடிப்படையில் கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான புதிய யாப்பை உருவாக்க நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கே. டி. சித்ரசிறி தலைமையிலான நிபுணர் குழுவில் ஜனாதிபதியின் சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர, சட்டத்தரணி கலாநிதி அரித்த விக்கிரமநாயக்க, இலங்கை வர்த்தக சபையின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோகர ஜயசிங்க, உதவி சட்ட வரைவு நிபுணர் ஷமிலா கிருஷாந்தி ஆகியோர் அங்கம் வகித்தனர்.
இதன்படி, கிரிக்கெட் யாப்பை மாற்றி அரசியல் மற்றும் பிற தலையீடுகள் இன்றி கிரிக்கெட் நிறுவனத்தின் செயல்பாடுகளை தொடர நீதியரசர் சித்ரசிறி குழு பரிந்துரை செய்துள்ளது. 18 பேர் கொண்ட கிரிக்கெட் சபைக்கு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நியமனம், விளையாட்டு சங்க வாக்கெடுப்பு இல்லாமல் நடக்க வேண்டும் என்பது இதன் மற்றொரு பரிந்துரைாயாகும்.
இந்த 18 பேரில் 09 பேரை நியமிக்கும் அதிகாரம் விசேட தனி நபர்கள் 04 பேருக்கு கிடைக்கவுள்ளது. அதாவது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர், பட்டய கணக்காளர் நிறுவகத்தின் தலைவர் மற்றும் மற்றுமொருவர்.
அவர்களால் நியமிக்கப்படும் கிரிக்கெட் அதிகாரிகள் சபையின் 9 பேரில் 5 பேர் சர்வதேச கிரிக்கெட் வீரர்களாகவும், எஞ்சிய 4 பேர் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த 9 பேரும் தெரிவு செய்யப்படும் போது, ஏனைய 9 பேரையும் தெரிவு செய்யும் அதிகாரம் கிரிக்கெட் கழகங்களுக்கே வழங்கப்பட உள்ளதாகவும் மேற்கொண்ட தேடுதலில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |