இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக சுரேன் ராகவன் தெரிவு
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன், இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க (Dhammika Dasanayaka) தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தின், இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நிர்வாகிகளை தெரிவு செய்யும் விசேட கூட்டம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் உதயன கிரிதிகொட, உப தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டயனா கமகே, இஷாக் ரஹ்மான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தவிர இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பொருளாளராக எஸ்.சிறிதரனும் உப செயலாளராக கீதா குமாரசிங்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாகிகளை தெரிவு செய்ய நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனும் கலந்துக்கொண்டார்.



