ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர்களை அதிகரிக்க ரஷ்யா ஆதரவு
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதைய ஐந்து நாடுகளிலிருந்து மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், அதேநேரம் தற்போதைய 'வீட்டோ' (Veto) அதிகார முறைமை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் அங்கத்துவத்தையும் 'வீட்டோ' அதிகாரத்தையும் முற்றாக ஒழிக்க வேண்டும் என துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் விடுத்த கோரிக்கை தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கிரெம்ளின் மாளிகையின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவம்
பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளைக் கொண்ட தற்போதைய பாதுகாப்புச் சபை சர்வதேச சமூகத்தை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்றும், விரைவான தீர்மானங்களை எடுக்கத் தவறிவருவதாகவும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் நீண்டகாலமாகக் குற்றம்சாட்டி வருகிறார்.

இது குறித்துக் கருத்து வெளியிட்ட ரஷ்ய பேச்சாளர் பெஸ்கோவ், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை விரிவாக்கப்படுவதை ரஷ்யா விரும்புவதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவமும் 'வீட்டோ' அதிகார உரிமையும் ஐக்கிய நாடுகள் சபையின் முழு அமைப்பிலும் மிகவும் முக்கியமான கூறுகளாகும் என்பதால் அவை தொடர வேண்டும் என ரஷ்யா கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200 ஆண்டுகளுக்கு மேல் சிறை - கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு