கனிமவள அகழ்வின் சுற்றுநிரூபங்களில் புதிய மாற்றங்கள்! மன்னாரில் முக்கிய கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் கனிம வளங்கள் அகழ்ந்தெடுப்பின் புதிய சுற்றுநிரூபத்தின் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது நேற்று (28.08.2026) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
புதிய சுற்றுநிரூபம்
கனிம வளங்களை அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த சுற்றுநிரூபங்களில் பல்வேறு மாற்றங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கருங்கல், கிரவல் மற்றும் மணல் அகழ்வில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு புதிய நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, எதிர்காலத்தில் கனிம வள அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது, மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான சிறப்புக் குழுவின் அனுமதியும் பெறப்பட வேண்டும் என புதிய நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய சுற்றுநிருபம் இலக்கம் 26/1298/110/046, 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் அதிகளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வீடமைப்புத் திட்டங்கள், வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்கு கருங்கல், கிரவல் மற்றும் மணல் போன்ற கனிம வளப் பொருட்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன.
கனிம வளங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள்
எனினும், குறித்த கனிம வளங்களை உரிய காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதம் காரணமாக பல அபிவிருத்தித் திட்டங்கள் பின்னடைவை எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, கனிம வளங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கான நடைமுறைகள் இலகுபடுத்த பட்டுள்ளதுடன், விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து 45 நாட்களுக்குள் அனுமதி பத்திரம் வழங்கப்பட வேண்டும் என புதிய சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சட்டவிரோதமான கனிமவள அகழ்வை கட்டுப்படுத்துவதற்கும் புதிய சுற்றுநிரூபத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.