எரிபொருளுக்கான QR பதிவில் புதிய முறை - வெளியாகியுள்ள தகவல்
விவசாயம், மீன்பிடி மற்றும் ஏனைய இயந்திர பயன்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எரிபொருளை பெற தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய QR முறைமையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இது குறித்து மேலும் கூறுகையில், வாகனங்கள் அன்றி இயந்திரங்களை இயக்க எரிபொருள் தேவைப்படும் தரப்பினருக்காகவே இந்த விசேட QR முறைமை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமது எரிபொருள் தேவையை கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகத்தில் உறுதிப்படுத்தி, இந்த புதிய QR முறைமையின் கீழ் பதிவு செய்துகொள்ள முடியும். இந்த புதிய QR குறியீடானது அந்தந்த நபர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய உருவாக்கப்படும்.
இத்திட்டம் 7 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், ஒவ்வொரு பிரிவிற்கும் வழங்கப்படும் எரிபொருள் அளவை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானிக்கும்.

இதன் மூலம் விவசாயிகள், கடற்தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளுக்காக இயந்திரங்களுக்காக எரிபொருளைப் பயன்படுத்தும் அனைத்து தரப்பினரினதும் எரிபொருள் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
வியாபார நிலையங்கள் எரிபொருள் QR குறியீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு வியாபார நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து வாகனங்களுக்கும் அந்த நிறுவனத்தின் பெயரிலேயே QR குறியீடு பெறுவதற்கான வசதியே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வசதியைப் பெறும் வழி
அவர் மேலும் தெரிவிக்கையில், வியாபார நிறுவனங்கள் தமது நிறுவனப் பதிவு இலக்கம் (BRN) மற்றும் ஒரு கைத்தொலைபேசி இலக்கத்தை மாத்திரம் பயன்படுத்தி இந்த வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு தேசிய அடையாள அட்டை அவசியமில்லை.
ஒரு வணிக நிறுவனத்தின் கீழ் இயங்கும் எத்தனை வாகனங்களாக இருந்தாலும், அவை அனைத்திற்கும் அந்த நிறுவனத்தின் பெயரிலான ஒரே கணக்கின் கீழ் புதிய எரிபொருள் ஒதுக்கீட்டுடன் கூடிய QR குறியீடுகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் சுமை குறைப்பு
இதன்மூலம் பல வாகனங்களை முகாமைத்துவம் செய்யும் நிறுவனங்களுக்குப் பெரும் சுமை குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் QR குறியீட்டு முறைமையின் கீழ் இதுவரை சுமார் 6.4 மில்லியன் பயனாளர்கள் இக்கட்டமைப்பில் இணைந்துள்ளனர். இதில் 2.8 மில்லியன் வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்னும் சுமார் 100,000 பயனாளர்கள் மாத்திரமே இக்கட்டமைப்பில் இணைய வேண்டியுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதோடு, வர்த்தகத் துறையினருக்குத் தடையற்ற சேவையை வழங்க உதவும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த 5 மாதத்திற்கு கட்டாய நடைமுறை! அரச ஊழியர் முதல் பொது மக்கள் வரை அனைவருக்கும் முக்கிய அறிவுறுத்தல்