கோட்டாபய வீட்டிற்கு அருகில் ஏற்பட்ட குழப்பநிலை - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹானா இல்லத்திற்கு அருகே போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என்று சட்டமா அதிபர் தரப்பிலிருந்து உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்ததாக கூறி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மனு விசாரணை
மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்பு இன்று (30) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த அரச சட்டத்தரணி இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக 54 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மனுதாரரும் ஒரு சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அரச சட்டத்தரணி அந்த விசாரணைகள் தொடர்பான சில கோப்புகளை சட்டமா அதிபர் திணைக்களத்தில் பொலிஸார் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசத்தரப்பு சட்டத்தரணிக்கு உத்தரவு
இருப்பினும், இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து தெரிவிக்க ஒரு திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
இருப்பினும், இந்த மனுவை செப்டம்பர் 25 அன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, அன்றைய தினம் சம்பந்தப்பட்ட விசாரணையில் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு அரசத்தரப்பு சட்டத்தரணிக்கு உத்தரவிட்டுள்ளது.