அரசுக்கு எதிரான குரல்களை முடக்கவே புதிய பயங்கரவாதப் பாதுகாப்புச் சட்டமூலம் - எழும் குற்றச்சாட்டு
இந்த அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாகக் கூறிக்கொண்டு, அதைவிடவும் பலமடங்கு ஆபத்தான அடக்குமுறைச் சட்டமூலத்தைக் கொண்டுவருவதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சட்டத்தரணி நுவான் போபகே வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, "தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்தபோது, தாங்கள் ஜனநாயகவாதிகள் என்றும், கடந்த அரசுகள் நிறைவேற்றிய அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்துச் செய்து, ஊழலற்ற ஆட்சியை வழங்குவதாகவும் மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தன.
அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள்
ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்கு முன்பே அந்த வாக்குறுதிகளை மறந்து அரசு ஜனநாயகத்துக்கு எதிரான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது மிகவும் துரதிஷ்டவசமானது.

மேலும், இந்த அரசு தமக்குத் தேவையான பிரதம நீதியரசரைத் தொடர்ந்து பதவியில் வைத்திருப்பதற்காக மக்கள் எதிர்ப்பையும் மீறி அரசமைப்பில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
மறுபுறத்தில், 'பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம்' என்ற பெயரில் மிகவும் ஆபத்தான அடக்குமுறைச் சட்டமூலமொன்றை அரசு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், மக்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையும், அரசின் செயற்பாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஜனநாயக உரிமையும் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பயங்கரவாதிகளாகக் முத்திரை குத்தப்படும் அபாயம் உள்ளது. ஆர்ப்பாட்டம் செய்வதும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும்.
ஆனால், இந்தப் புதிய சட்டத்தின் கீழ் பொலிஸார் கூறும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆர்ப்பாட்டங்களை நடத்தவேண்டிய நிலை ஏற்படும்.
இல்லாவிட்டால் அவற்றைத் தடை செய்யும் அதிகாரம் பொலிஸாருக்குக் கிடைக்கும்.
அரசியலில் ஈடுபடும் உரிமை
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளைப் பின்பற்றிச் சாதாரண மக்கள் மீது பாரிய வரிச்சுமையைச் சுமத்திக்கொண்டு, செல்வந்தர்களுக்குச் சலுகைகளை வழங்கும் அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராகப் போராடுபவர்களின் வாயை மூடுவதற்கே இத்தகைய அடக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வடக்கிலும் தெற்கிலும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்தச் சட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தரப்புகளில் அப்போதைய மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றாகும்.
அவ்வாறு பயங்கரவாதச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கட்சியே இன்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு, அதைவிடவும் ஆபத்தான அடக்குமுறைச் சட்டமூலத்தைக் கொண்டு வருவது மிகவும் வெறுக்கத்தக்க விடயமாகும்.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரசியலில் ஈடுபடும் உரிமை மட்டுமன்றி, ஊடகச் சுதந்திரம் மற்றும் கலைச் சுதந்திரமும் கேள்விக்குறியாகிவிடும். எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் புதிய பயங்கரவாதப் பாதுகாப்புச் சட்டமூலம் ஆகிய இரண்டு அடக்குமுறைச் சட்டங்களையும் முற்றிலுமாக இல்லாதொழிக்க வேண்டும்.
இந்த அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தில் எந்தவித நிபந்தனையுமின்றி ஒன்றிணையுமாறு நாட்டின் அனைத்துப் பிரஜைகளையும் கேட்டுக்கொள்கின்றேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.