நேபாள வெள்ளப்பெருக்கு: மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காண்பதில் தொடரும் சிக்கல்
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் பின்னர் மீட்கப்பட்ட சடலங்களில் சுமார் 7 சதவீதமான சடலங்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 1,399 பேர் உயிரிழந்துள்ளதுடன், 636 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 5,200 பேர் வரை இன்னமும் காணாமல் போயுள்ளனர்.
உயிரிழந்தவர்களிடமிருந்து 1,206 டி.என்.ஏ மாதிரிப் பரிசோதனைகளும், காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து 1,889 மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ள போதிலும், 105 சடலங்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பெரும் சவால்கள்
பாதிக்கப்பட்ட மலைப்பிரதேசங்கள் மற்றும் நீர்மின் நிலையப் பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க உலங்குவானூர்திகள் மற்றும் அதிநவீன ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும், கடுமையான புவியியல் அமைப்பு மற்றும் மலைப்பகுதிகளில் குவிந்துள்ள பாறை இடிபாடுகள் காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் பெரும் சவால்கள் நிலவுவதாக நேபாளத் தேசிய பேரிடர் மேலாண்மை முகவரகம் சுட்டிக்காட்டியுள்ளது.