முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை ஒன்றின் பொறுப்பற்ற செயல்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் உள்ள பிரதேச வைத்தியசாலைக்குரிய மலசல கூடத்தொகுதி ஒன்றின் இன்றைய நிலை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வைத்தியசாலைக்குள் உள்ள இந்த மேம்பட்ட மலசலகூடத் தொகுதி சரிவர பராமரிக்கப்படவில்லை.இதனால் அவை பழுதடைந்து செல்லும் நிலையில் இருப்பதாக ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வைத்தியசாலையில் உள்ள கட்டடத் தொகுதி ஒன்றின் கழிவறைத்தொகுதி இப்படி மோசமான நிலையில் இருக்கும் போது அப் பிராந்தியத்தின் சுகாதாரம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் தொடர்பில் எப்படி அந்த வைத்தியசாலையினால் வழிகாட்டல்களைச் செய்து சிறந்த சுகாதார ஆரோக்கியமிக்க சமூகத்தினை உருவாக்க முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பில் இருக்கும் ஒரு கட்டத்தொகுதியில் மக்கள் பாவனைக்கென இந்த கழிவறைத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளதுடன் பொறுப்புணர்ச்சியற்ற அசமந்தப் போக்கினை கொண்ட ஊழியர் குழாமினை ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை கொண்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
பராமரிப்பு இல்லை
குறித்த வைத்தியசாலையின் மலசல கூடம் மாபிள் கட்டமைப்புக் கூறுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக சீமெந்தினை மட்டும் கொண்டு அமைக்கப்படும் மலசலகூடம் வசதியற்ற மக்களின் பாவனையில் இருப்பதான எண்ணக்கரு மக்களிடையே மேலோங்கி உள்ள இன்றைய சூழலில் வசதியானவர்களாக தங்களைப் பாவனை செய்யும் மக்களின் வீடுகளிலும் வசதியான மக்களின் வீடுகளிலும் மாபிள் கூறுகளாலான மலசலகூடத் தொகுதியை அமைத்துக் கொள்கின்றனர்.
அது போன்றதொரு மலசல கூடமும் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையின் பிரதான கட்டடத் தொகுதிக்கு அருகிலுள்ள கட்டடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
பெறுமதி வாய்ந்த ஒரு கட்டமைப்பாக இது இருக்கும் அதே வேளை அதன் மாபிள் பகுதிகளை சுத்தம் செய்து கொள்வதும் இலகுவானதாகவும் இருக்கின்றது.
சுவரின் ஒரு பகுதி மற்றும் கை கழுவும் இடம் என அந்த அறையே மாபிள் மூலம் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது.அந்த அறையின் தரையும் கூட மாபிள் இடப்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு கட்டமைப்பு கொண்ட மலசல கூடத்தைச் சுத்தமாக பேணி பயன்படுத்திக் கொள்ள முடியாத நிர்வாகமாக ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையின் நிர்வாகம் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என இந்த விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச மக்களிடையே மேற்கொண்ட கருத்துக் கேட்டல்களின் போது மக்களில் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
சிறந்த முறையில் சுத்தம் செய்து பயன்படு நிலைக்கு இந்த கழிவறைத் தொகுதியை மாற்றியமைக்க உரிய தரப்பினர் கரிசனையோடு செயற்பட வேண்டும்.
அத்தோடு இன்னொரு முறையும் இது போல் அசுத்தமடைந்து சேதமடையும் போது நீண்ட கால பாவனைக்கு பயன்டுத்த முடியாத இக்கட்டு நிலை தோன்றும்.அப்போது மீண்டும் திருத்த வேலைகளுக்கென பெரும் தொகையில் நிதியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
கிடைக்கும் வளங்களை உரிய முறையில் பராமரித்து பேணி பாதுகாத்து பயன்படுத்தும் பழக்கமே நற்பழக்கமாக இருக்கும் என விடுதலைப்புலிகளின் மருத்துவமனை ஒன்றில் மருத்துவப்பணியாளராக பணியாற்றி இன்று முதுமையில் உள்ள ஒருவர் தன்னுடைய உணர்வுகளை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளதோடு மருத்துவமனைகளின் சுத்தம் மற்றும் பொருட்களை பராமரித்தலில் அவர்கள் மிகவும் கண்டிப்போடு நடத்துவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள்
தொடர்ச்சியாக ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய போதும் மெதுவாகவே மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக அப்பிரதேசத்தின் மற்றொரு வயோதிபர் எடுத்துரைத்துள்ளார்.
பிராந்திய வைத்தியசாலையாக இருக்கும் இது தன்னகத்தே கொண்டுள்ள குறைபாடுகளை சீர் செய்வதில் அதிக கவனமெடுத்துச் செயற்பட வேண்டிய சூழலில் அது விடுத்து அக்கறையற்ற போக்கினைக் கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
வைத்தியசாலைக்கான பிரதான வீதி கற்குவியல்கள் சிதறிய கோலத்தில் இருக்கின்றது.வைத்தியசாலைக்கென நோயாளர் நலன்புரிச் சங்கம் இதுவரை இல்லாத நிலை இருக்கின்றது.
வைத்தியசாலை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத் தொகுதி ஒன்றில் உள்ள மலசலகூடத் தொகுதி மோசமடைந்து செல்கின்ற போக்கு என வைத்தியசாலையின் செயற்பாடுகள் கவலையளிப்பதாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவைக்கு மேலதிகமானவை
குறித்த பிரதேசமொன்றின் அமைக்கப்பட்ட ஒரு கட்டுமானம் நடைமுறையில் பயன்பாட்டில் இல்லாது இருக்கும் போது அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணாணதே!
அபிவிருத்தி என்ற போர்வையில் தேவைக்கு அதிகமாக ஏற்படுத்தப்படும் உட்கட்டுமானங்களினால் எந்தப் பயனும் பொது மக்களுக்கு ஏற்பட்டு விடப்போவதில்லை.
பிரதேச அபிவிருத்தி தொடர்பில் திட்டமிடல்களைச் செய்யும் போது உச்சளவு பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு அவை திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் இந்தச் செயற்பாட்டின் பராமரிப்பு மற்றும் அதனை சீராக பேணுவதற்கான கண்காணிப்புக்களையும் ஒழுங்கமைத்துக் கொடுத்திருக்க வேண்டும்.அப்படியான ஒரு திட்டமிடலே இனிவரும் காலங்களில் இது போன்ற வீணடிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ள உதவும்.
தேவைக்கு மேலதிகமாக இருக்கும் எந்தவொரு பொருளும் அதன் அருமை தெரியாது கையாளப்படும் என்பதற்கு ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையின் கட்டடத்தொகுதி ஒன்றின் பயன்பாடற்ற தன்மை சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |