முல்லைத்தீவு வைத்தியசாலையின் அலட்சியத்தால் பறிபோன உயிர்: உறவினரின் உருக்கம்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற அசமந்த போக்கினால் தனது மருமகளை இழந்ததாக இரத்தினம் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தும் நோக்கில் இன்றையதினம்(06.10.2025) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மேற்கொண்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெளிவுப்படுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எனது குடும்பத்தில் இருந்து மருமகளை இழந்திருக்கின்றேன். இதில் எந்தவொரு மருத்துவரையும் தனிப்பட்ட முறையில் குறை கூறினால் தகுதியானவர்கள் என்னை மன்னிக்கவும். தகுதியற்றவர்கள் என்மீது கோபப்படலாம். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் எனது மருமகள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவித்திருந்தார்.
மருத்துவ விடுதிகள்
அதன் பின்னர் ஆரோக்கியமாக இருந்தார். ஆனால் கடந்த 26ஆம் திகதி நாரி உளைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு சென்றோம். பரிசோதனையில் சிறுநீரகத்திலும் இரத்தத்திலும் கிருமி தாக்கம் இருப்பதாக வைத்தியர் குறிப்பிட்டு, உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு 28ஆம் திகதி எழுதி தந்திருந்தார்.
அதன்படி 28ஆம் திகதி மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்தோம். தனியார் வைத்தியர் வழங்கிய அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தும், மாஞ்சோலை வைத்தியசாலையில் சாதாரண நோயாளர் வாட்டில் வைத்திருந்தார்கள்.
29ஆம் திகதி பிற்பகல் வரை சேலன் மட்டுமே ஏற்றியிருந்தார்கள். வேறு எந்தவித சிகிச்சையும் வழங்கப்படவில்லை. பின்னர் மாலை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியிருந்தார்கள். அங்குள்ள வைத்தியர்கள் தாமதமாக வந்ததனால் பாதுகாக்க முடியாது என்று தெரிவித்தனர்.
எமது மாவட்ட வைத்தியசாலையில் போதுமான துறைசார் வைத்தியர்கள் இல்லை. அரச மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லை. 25 வைத்தியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் மொழி தெரியாமல் சேவை செய்வதற்காகவே காலம் கடக்கிறது. அனுபவம் வாய்ந்த வைத்தியர்கள் மிகக் குறைவு. மக்களுக்கான மருத்துவ விடுதிகளை விட காரியாலய கட்டிடங்களே அதிகம்.
மன வேதனை
முல்லைத்தீவில் 80 வீதம் வேற்று மொழி பேசுவோரும், இருபது வீதம் தமிழர்களும் நிர்வாகிகளாக உள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினைகள் சரியாகப் புரியப்படவில்லை. ஒரு பெண் சில மணி நேரங்களில் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதுவே மருத்துவ அமைப்பின் தோல்வியே.
மாஞ்சோலை வைத்தியசாலைக்கு செல்லும் மக்களே, உங்கள் பிள்ளைகளின் நிலையை ஒருநாள் நினைத்துப் பாருங்கள். எனது மருமகளின் மரணத்திற்கு நான் நியாயம் கேட்கவில்லை. ஆனால் இனி இதுபோன்ற துயரங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். யாரும் இதனை கேட்கவில்லை என்றாலும், இது திட்டமிட்ட தவறாகவே தோன்றுகிறது.
அரசியல்வாதிகளின் பக்கம் திருப்பும் கமராவை, மக்களின் மருத்துவ துயரங்களை நோக்கி ஒருதரம் கமராவை திருப்புங்கள். நூற்றில் தொண்ணூறு வீதமானோர் அழுகுரலாகவே வாழ்கின்றனர்.
33 வயதில் இரண்டு மாத குழந்தையை தாயின்றி விட்டுச் சென்றது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




