அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்கள்
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“அம்பாறை மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்கள் தமிழ்ப் பிரதேச செயலகங்களாக உள்ளதுடன் சம்மாந்துறை, பொத்துவில் என்ற அடிப்படையில் சுமார் ஏழு பிரதேச செயலகங்களில் தமிழ் மக்கள் வாழந்து கொண்டிருக்கின்றார்கள்.
குறைவான நிதி
மாவட்டத்தின் அபிவிருத்தியில் தமிழ்ப் பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் எந்தவிதமான கூட்டங்களும் நடைபெறவில்லை.
அப்பிரதேசத்திற்கென நிர்வாகம் இருக்கின்றது. பிரதேச செயலாளரும் இருக்கின்றார். இந்த நிதி ஒதுக்கீட்டில் குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நாட்டில் ஆட்சியமைக்கும் ஒவ்வொரு அரசாங்கமும் தங்களுக்குச் சாதகமாக விடயங்களைப் பயன்படுத்துவதற்கான முன்னெடுப்புகளையே மேற்கொண்டு வருகின்றன.
இதனை அரசாங்கம் மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென்றும் மாகாணசபைகளுக்கென்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பாதிக்கப்படும் தமிழ் மக்கள்
ஆனால், இம்முறை அவ்வாறு இல்லை. இது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலே எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் என்று சொல்லப்படுகின்றது.
இந்த அபிவிருத்தி ஒதுக்கீடுகளில் தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள விடயத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக யுத்த காலத்திலும் சரி, இப்போதும் சரி என்றும் பாதிக்கப்படும் இனமாகவே இருந்து கொண்டிருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |