மன்னாரில் தவறான முடிவெடுத்து கடற்படை வீரர் உயிர்மாய்ப்பு
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை வீரர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் இன்று (04.01.2024) காலை கடற்படை முகாமிற்கு வெளியில் உள்ள காட்டுப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலமாக மீட்கப்பட்ட கடற்படைச் சிப்பாய் 33 வயது உடையவர் எனவும் மூன்று
பிள்ளைகளின் தந்தை எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் முறைப்பாடு
மேலும், முள்ளிக்குளம் கடற்படை முகாமில் உள்ள விடுதியில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் உயிரிழந்த கடற்படை சிப்பாய் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடற்படை சிப்பாய் கடந்த இரண்டாம் திகதி கடற்படை முகாமில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற நிலையில் அவர் மீண்டும் முகாமிற்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய தனது கணவர் காணாமல் போனமை குறித்து அவரது மனைவி நேற்றைய தினம் (3)
சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடற்படை சிப்பாய் தவறான முடிவெடுத்த நிலையில் இன்று (4) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சிலாபத்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |