கடலில் மீன்பிடிக்க வீசப்பட்டிருந்த 5 சுருக்கு வலைகள் கடற்படையினரால் மீட்பு
காத்தான்குடி - பாலமுனை கடலில் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பெறுமதியான 5 சுருக்கு வலைகளை கடலில் வைத்து கடற்படையினர் மீட்டுள்னர்.
குறித்த சுருக்கு வலைகள் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் நேற்று (01.10.2026) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
திடீர் சுற்றிவளைப்பு
கல்லடி கடற்படை புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடற்படையினர் சம்பவ தினமான புதன்கிழமை இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த வலைகள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, பாலமுனை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், களுதாவளை, களுவங்கேணி உட்பட பல பிரதேசங்களில் சுமார் 50க்கு மேற்பட்ட சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
