இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டுக்கு வழிகாட்டும் தேசிய விளையாட்டு சபை
இலங்கையில் விளையாட்டு மேம்பாடு மற்றும் நிர்வாகம் குறித்து வழிகாட்டுதலை வழங்குவதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே(Sunil Kumara Gamage), புதிய தேசிய விளையாட்டு சபை ஒன்றை அமைத்துள்ளார்.
இலங்கை ரக்பி அணியின் முன்னாள் தலைவர் பிரியந்த ஏகநாயக்க இந்த சபையின்; தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய விளையாட்டு சபை
ஏக்கநாயக்க முன்னர் இலங்கை மற்றும் ஆசிய ரக்பி சபைகளின் தலைவராக பணியாற்றியுள்ளார் அத்துடன், நியூசிலாந்து மற்றும் வேல்ஸில் தொழில்முறை ரக்பியும் விளையாடியுள்ளார்.
இந்தநிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில், கொழும்பு பல்கலைக்கழகத்தில் விளையாட்டு ஆய்வுகள் பேராசிரியர் மற்றும் இந்தத் துறையில் இலங்கையின் முதல் பேராசிரியரான சமந்த நாணயக்கார, சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் ஆலோசகர் மற்றும் அனுபவம் வாய்ந்த நடுவர் ருக்மன் வெகடபொல,- முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சிதத் வெத்திமுனி, உயர் நீதிமன்ற சட்டத்தரணி சானக ஜெயமஹா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
விளையாட்டுக் கொள்கை
இதனை தவிர முன்னாள் தேசிய ரக்பி வீரர் ரோஹன் அபேகோன், இலங்கையின் முதல் ஒலிம்பிக் பேட்மிண்டன் வீரர் நிரோசன் விஜேகோன்,டேபிள் டென்னிஸ் மற்றும் கோல்ஃப் உட்பட பல விளையாட்டு கூட்டமைப்புகளில் முன்னாள் அதிகாரி முராத் இஸ்மாயில்,முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரொசான் மகாநாம, விளையாட்டு விதிமுறைகளில் நிபுணத்துவம் பெற்ற மொரட்டுவா பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளர் சி. ரத்னமுதலி, ஒலிம்பிக் தடை தாண்டும் வீரர் ஸ்ரீயானி குலவன்ச, டில்மா பிரைவேட் லிமிடெட்டின் இணைத் தலைவர் மாலிக் ஜே. பெர்னாண்டோ, முன்னாள் ரக்பி வீராங்கனை சனிதா பெர்னாண்டோ ஆகியோரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இலங்கையின் விளையாட்டுக் கொள்கையை வடிவமைப்பதிலும், தடகள வீராங்கனைகளின் வளர்ச்சியை வளர்ப்பதிலும் இந்த சபை முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
