நாட்டு மக்களுக்கு தேசிய லொத்தர் சபையின் விசேட செய்தி
நாட்டு மக்களுக்கான அறிவிப்பு
லொத்தர் சீட்டுகளைக் கொள்வனவு செய்வதன் மூலம் மக்கள் அனைவரும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்க முடியும் என தேசிய லொத்தர் சபையின் பதில் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி.பெரேரா தெரிவித்துள்ளார்.
தேசிய லொத்தர் சபையினால் இந்த ஆண்டு பரிசுகளை வெற்றி கொண்ட 16 வெற்றியாளர்களுக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (16.09.2022) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கான அதிஷ்டம்
இதேவேளை அபிவிருத்தி லொத்தர் சபையுடன் இணைந்துள்ள வடக்கு, கிழக்கு லொத்தர் வாடிக்கையாளர்களுக்கு அதிஷ்டத்தினை உரித்தாக்கும் முகமாக வலம்புரி பெயரில் விசேட லொத்தர் ஒன்றினை அறிமுகப்படுத்த அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்திருந்தது.
அதன்படி அபிவிருத்தி லொத்தர் சபை தமது வடக்கு, கிழக்கு மக்களுக்காக அறிமுகப்படுத்தும் இவ்விசேட லொத்தரினை சந்தைக்கு வெளியிடும் நிகழ்வு கடந்த 2022.09.06ஆம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் / பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் குணரத்ன நாரகலவின் தலைமையில் நடைபெற்றிருந்தது.
அதிஷ்டத்தின் வெற்றி நாதம் எனும் வலம்புரி விசேட லொத்தர் மூலம் இரண்டு மில்லியன் வரையிலான பணப்பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று இலக்கங்களுடன் ராசி அடையாளம் பொருந்துமாயின் இருபது இலட்சம் பணப்பரிசும், மூன்று இலக்கங்கள் மட்டும் பொருந்துமாயின் ரூ.100,000 பணப்பரிசுகளும், இரண்டு இலக்கங்கள் பொருந்துமாயின் 500 ரூபாய் பணப்பரிசும், யாதாயினும் ஒரு இலக்கம் அல்லது ராசி அடையாளம் பொருந்துமாயின் 50 ரூபாய் பரிசுகள் பலவற்றையும் வெல்ல முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.