தென் சீனக் கடல் விவகாரம் : சீனாவின் உரிமை கோரல்களை நிராகரித்தது பிலிப்பைன்ஸ்
தென் சீனக் கடல் பகுதியில் உள்ள ஸ்கார்பாரோ ஷோல் (Scarborough Shoal) தீவு தங்களுக்குச் சொந்தமானது என்ற சீனாவின் வாதத்தை பிலிப்பைன்ஸ் அரசு திங்கள்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
பிலிப்பைன்ஸ் தூதுவர் ஒருவர் முன்னதாக இத்தீவு தங்களுக்குச் சொந்தமானது அல்ல என்று ஒப்புக்கொண்டதாக மணிலாவில் உள்ள சீனத் தூதரகம் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது.
சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரோஜலியோ வில்லனுவேவா, "கடல்சார் மற்றும் எல்லை உரிமை கோரல்கள் சர்வதேச சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டவை; அவை ஒருதலைப்பட்சமான பிரகடனங்கள் மூலமாகவோ அல்லது சமூக வலைதளப் பதிவுகள் மூலமாகவோ தீர்மானிக்கப்படுவதில்லை" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், ஸ்கார்பாரோ ஷோல் மற்றும் ஸ்ப்ராட்லி தீவுக்கூட்டங்கள் மீது பிலிப்பைன்ஸிற்கு பிரிக்க முடியாத மற்றும் நீண்டகால இறையாண்மை இருப்பதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் கடற்கரையிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள இத்தீவு, அந்நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) அமைந்திருந்தாலும், தற்போது சீனாவின் கடலோர காவல்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மீன்பிடி வளம் மற்றும் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்தத் தீவுக்காக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது மற்றும் விநியோகப் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகப் பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டி வருகிறது.
2016ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தென் சீனக் கடலில் சீனாவின் உரிமை கோரல்களுக்கு எந்த சட்டபூர்வ அடிப்படையும் இல்லை என்று கூறப்பட்ட போதிலும், சீனா அதனைத் தொடர்ந்து புறக்கணித்து வருவது இப்பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam