லொத்தர் சீட்டுக்களை விற்பனை செய்து வந்த விசேட தேவையுடைய பெண்ணின் தற்போதைய அவல நிலை (Video)
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிப்படைந்த வடக்கு, கிழக்கு மக்கள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்வதற்கு பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக யுத்தம் காரணமாக தமது கணவன்மாரை இழந்த விதவைப் பெண்கள், உடல் அங்கவீனமுற்றோர், விசேட தேவைக்குட்பட்டோர் என வடபகுதியில் அதிகமாக உள்ளனர்.
இந் நிலையில் அவர்கள் இலகுவாக குறைந்த முதலீட்டுடன் வருமானத்தை ஈட்டக் கூடிய ஒரு தொழிலாக லொத்தர் சீட்டு விற்பனை மாறியிருந்தது.
ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அவர்களின் நிலை என்ன என்பது பலரும் அறியாத நிலையில் உள்ளனர்.
செல்லையா சந்திரிக்கா
வவுனியாவில் லொத்தர் சீட்டு விற்பனையில் ஈடுபட்ட முதலாவது பெண் என்ற பெருமையை வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட செல்லையா சந்திரிக்கா என்ற 50 வயதுப் பெண் ஆவார்.
போலியோ நோயினால் சிறுவயதில் பாதிக்கப்பட்டு கால் நடக்க முடியாத நிலைக்கு சென்ற அவர் தனது விடா முயற்சியால் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அதிஸ்டலாப சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருவதுடன், அந்த வருமானத்தில் தனது தந்தை மற்றும் சகோதரி ஆகியோரை தற்போது பராமரித்தும் வருகின்றார்.
ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிஸ்டலாப சீட்டு விற்பனை சடுதியாக குறைவடைந்துள்ளதுடன், அதன் மூலம் கிடைக்கும் பரிசுகளும் குறைவடைந்துள்ளது.
வவுனியா கூமாங்குளம் பகுதியில் இருந்து சராசரியாக 5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வவுனியா நகரப்பகுதிக்கு முச்சக்கர வண்டியில் வருகை தந்து சாயி வீதியில் அதிஸ்டலாப சீட்டினை விற்பனை செய்து வருகின்றார்.
தற்போது எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனது முச்சக்கர வண்டிக்கு பெட்ரோல் பெற முடியாத நிலையில் அதிஸ்டலாப சீட்டு விற்பனைத் தொழிலை கூட கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இது குறித்து சந்திரிக்கா இவ்வாறு கூறுகின்றார்.
"நான் கால் ஊனமுற்ற விசேட தேவைக்குட்பட்ட பெண். நான் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து லொத்தர் சீட்டுக்களை விற்பனை செய்து வருகின்றேன். எனது குடும்பத்தில் உள்ள சகோதார்கள் எல்லோரும் திருமணம் செய்து இருக்கின்றார்கள்.
இருந்தாலும் விசேட தேவைக்குட்பட்ட நான் எவருக்கும் பாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தொழில் மூலம் கடந்த 10 வருடமாக உழைத்து எனது அம்மா, அப்பா, அக்கா ஆகியோரை பராமரித்து வருகின்றேன்.
அம்மா இறந்து விட்டார். தற்போது லொத்தர் சீட்டு விற்பனை குறைவு, முச்சக்கர வண்டிக்கு பெட்ரோலும் இல்லை. விசேட தேவைக்கு உட்பட்டவர் என்று கூட பார்த்து எனக்கு பெட்ரோல் அடிக்க இடம் தருகிறார்கள் இல்லை.
அங்கு நிற்பவர்கள், பொலிஸார் கூட எம்மை தரக்குறைவாக பார்க்கிறார்கள். எதையோ என்னிடமே எதிர்பார்க்கிறார்கள். உடல் ஏலாத நிலையிலும் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என நினைத்து உழைத்து வாழ விரும்பும் எனக்கே இந்த நிலையா என கண்ணீர் விடுகின்றார் சந்திரிக்கா.
இவ்வாறு கண்ணீர் விடும் சந்திரிக்கா போன்ற பல குடும்பங்களின் கண்ணீருக்கு
பதில் தான் என்ன...?