புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்! வரவேற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும், தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம் நீக்கியமைக்குத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் தடையில் உள்ள ஏனைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்களையும் கறுப்புப்பட்டியலில் இருந்து இலங்கை அரசாங்கம் நீக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிபந்தனைகளின் 1373 இன் கீழ், இலங்கைக்குள் 18 அமைப்புக்களுக்கும், 577 தனிநபர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் ரணில் எடுத்துள்ள தீர்மானம்! பிரதமரின் பகிரங்க அறிவிப்பு |
பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட வர்த்தமானி
இந்த நிலையில் இலங்கைக்குள் தடைசெய்யப்பட்ட உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய 6 அமைப்புக்கள் மீதான தடையும், 316 தனிநபர்களுக்குமான தடையும் நீக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு அதிவிசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் எமது செய்தியாளரிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
“அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்கின்றோம். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் மீள் எழுச்சிக்குப் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியம்.
அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள்
இதனை உணர்ந்து சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதும், தனிநபர்களினதும் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை வரவேற்கின்றோம்.
அதேவேளை, தொடர்ந்தும் தடையில் உள்ள ஏனைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பிலும் ரணில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
புலம்பெயர் தமிழர்களுடன் இலங்கை அரசாங்கம் நெருக்கமாகப் பேசி நாட்டுக்காக அவர்களின் உதவிகளைப் பெற வேண்டும்’’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் “பொதுவாக இது நல்ல செய்தி என்றுதான் நாங்கள் எண்ணுகின்றோம். பொருளாதார ரீதியாக உதவிகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் சிலர் மீதான தடையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீக்கியுள்ளார் என்று நாங்கள் எண்ணலாம். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம்.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ரணில் அரசாங்கம் வழங்க முன்வந்தால்தான் அவர்கள் எதிர்பார்க்கின்ற புலம்பெயர் தமிழர்களுடைய முதலீடுகளும், பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான உதவிகளும் கிடைக்கும் என்று கருத வேண்டும்.
அதேவேளை, ஏனைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது தொடரும் தடையையும் நீக்க ரணில் அரசாங்கம் முன்வர வேண்டும்’’ என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், “புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் சிலர் மீதான தடையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீக்கியுள்ளமையை வரவேற்கின்றோம். இன்னும் பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தனிநபர்களின் பெயர்களும் தடைசெய்யப்பட்ட பட்டியலிலேயே காணப்படுகின்றன.
அந்த தடையையும் நீக்குமாறு தாம் கோருகின்றோம். முதலீடு செய்யத் தயாராக இருக்கும் புலம்பெயர் உறவுகள் அச்சமின்றி தங்கள் முதலீடுகளை செய்வதற்கு இந்த தடையை நீக்குவது அவசியமாகும்.
இதைக் கருத்தில்கொண்டு ஏனைய புலம்பெயர் அமைப்புகளையும் தனிநபர்களின் பெயர்களையும் தடைப்பட்டியலில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றோம்’’ என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம்
"புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் பலர் மீதான தடையை கடந்த நல்லாட்சி அரசாங்கம் நீக்கியிருந்தது.
பின்னர் ஆட்சிக்கு வந்த கோட்டாபய அரசாங்கம், மீண்டும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது தடையை விதித்திருந்தது.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த தடையை நீக்கியுள்ளார். எல்லோருக்கும் இல்லாவிடினும் சில முக்கிய அமைப்புக்கள் மற்றும் முக்கிய நபர்கள் சிலர் மீதான தடையை ரணில் அரசாங்கம் நீக்கியுள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம்.
புலம்பெயர் தமிழர்களின் உதவிகள்
சில அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் சிலர் மீதான தடை இன்னமும் தொடர்கின்றது. இதனை ரணில் அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
புலம்பெயர் தமிழர்களுடைய முதலீடுகளும், உதவிகளும் இலங்கைக்கு வர வேண்டும் என்று ரணில் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
ஆகவே, புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தக்கூடியவர்கள் அல்லது அந்த அமைப்புக்களூடாக மக்களுடன் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தடையில் இருந்தால் தாம் எதிர்பார்க்கும் காரியங்கள் நடக்காது என்ற காரணத்தால் இந்த தடையை ரணில் அரசாங்கம் நீக்கியுள்ளது என தர்மலிங்கம் சித்தார்த்தன் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.