அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவை அழைப்பு
தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி "செம்மணி உடனிருப்பு வேண்டுதல்" இன்று செம்மணி அணையா தீப சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை முன்னெடுக்கப்பட்ட இந்தப் அடையாளப் போராட்டத்தில் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களின் மறைமாவட்ட ஆயர்கள் அருட் சகோதரர்கள் என பல கத்தோலிக்க பிரமுகர்கள் பங்கெடுத்து முன்னெடுத்திருந்தனர்.
அஞ்சலி
முன்பதாக அணையா தீப தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவையினர் அங்கிருந்து ஊர்வலமாக சிந்துபாத்தி மயானம் சுற்றுவட்டம் சென்று அங்கும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து கூறிய தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவையின் பொதுச் செயலாளர் சுஜிதர் சிவநாயகம் - செம்மணி மனித புதைகுழி தொடர்பான தகவல்கள் மீண்டும் பல தமிழ் மற்றும் சில ஆங்கில ஊடகங்களின் வழியாக வெளிக்காணரப்பட்டிருப்பதைக் குறித்து இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் அதன் ஆழ்ந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
இருப்பினும் இது தொடர்பான செய்திகள் குறித்து பிரதான சிங்கள ஊடகங்களின் கவனம் குறைவாக இருப்பது மிகவும் கவலைக்குரியது.
ஒரு நாடாக, இவ்விதமான வலிமிகுந்த உண்மைகளிலிருந்து நாம் பின்வாங்க முடியாது. இதே நேரம் 2017ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், 1980களின் இறுதியிலிருந்து இலங்கையில் 60,000 முதல் 100,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சமூகத்திற்கு பாதிப்பு
மேலும், 2017இல் நிறுவப்பட்ட காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகம், பாதுகாப்பு படையினரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சுமார் 21,000க்கும் அதிகமான முறையீடுகளைப் பெற்றுள்ளது. இத்தகைய புள்ளிவிவரங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் குறித்த துயரம் எமது நாட்டில் ஒவ்வொரு சமூகத்தையும் பாதித்திருக்கிறது.
இதே நேரம் சர்வதேச தொழில்நுட்ப ஆதரவின் அவசியத்தை சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணையம் (ICJ) வலியுறுத்தியுள்ளது, மேலும் அத்தகைய உதவியை தாமதமின்றி நாடுமாறு அரசாங்கத்தை கோருகின்றோம். அத்துடன் வளங்கள் பற்றாக்குறையால் உண்மையை சமரசம் செய்ய முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
செம்மணி மனித புதைகுழி தனித்துவமான வேதனையை வெளிப்படுத்துகிறது. மற்றைய மனித புதைகுழிகளில் இளையோர் மற்றும் முதியோர் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும், இங்கு பாடசாலைப் பைகள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஆபத்து
இவை உயிர்கள் அழிந்ததையும், மேலும் எமது நாட்டைச் சிதைத்த இன அரசியல் பரிமாணங்களையும் சாட்சியப்படுத்துகின்றன. இவ் அகழ்வுகள் மீதான மௌனம், சமூகங்களுக்கு இடையிலான அவநம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவதோடு, போரின் காயங்களை நீடிக்கச் செய்யும் ஆபத்தும் இதில் உள்ளது.
செம்மணி மனித புதைகுழி விசாரணை முழுமையாகவும் வெளிப்படையாகவும் நிறைவுக்கு கொண்டுவரப்படும் பட்சத்தில், அது தமது காணாமல்போன உறவுகளுக்கான பதில்களை இன்றும் தேடி அலையும் குடும்பங்களுக்கு ஓரளவு நீதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நீதி தாமதிக்கப்பட்டாலும் அது மறுக்கப்படமாட்டாது என்ற நம்பிக்கையை எம் மக்களுக்கு தரக்கூடிய ஒளிக்கீற்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என தெரிவித்துள்ளார்.








 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        