மன்னாரில் கால்நடைப் பண்ணையாளர்கள் போராட்டம்
நானாட்டான் - முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேய்ச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (26.10.2023) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மக்களின் கோரிக்கை
ஒவ்வொரு வருடமும் மாந்தை மேற்கு, இலுப்பை கடவை பகுதிக்கு தமது கால்நடைகளை கொண்டு சென்று பல்வேறு விதமான துன்ப துயரங்களையும் கால்நடை இழப்புக்களையும், மனித இழப்புக்களையும் சந்திக்க நேருவதுடன் பாரிய பொருளாதார இழப்புக்களையும் சந்திப்பதாகவும், அப்பகுதியில் உள்ளவர்களுடன் எமக்கு முரண்பாடுகளும் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தமது கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் பகுதியை மேச்சல் நிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பல வருடமாக கோரிக்கை விடுத்ததன் பிரகாரம் பலமுறை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் நடை முறைச் சாத்தியமாக்கவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த (12-10-2023) அன்று வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இதுவரை நடை முறைப்படுத்தவில்லை என்பதே வேதனைக்குரிய விடயம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்குவது தொடர்பான விடயத்தில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றார்கள் என்பது வெளிப்படையாகவே புலனாகின்றது, எனவே உடனடியாக எமக்குரிய மேய்ச்சல் நிலத்தை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்ததோடு, மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் மகஜர் வாசித்து கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டிருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், நானாட்டான் - முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மத தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.