ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..!
இந்த மாதம் 8ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 8 வரை ஐநா மனித உரிமை ஆணையத்தின் அறுபதாவது கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த கூட்டத்தொடரின் ஆரம்பத்திலேயே இலங்கை அரசு "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல அது ஒரு பயங்கரவாததிற்கு எதிரான மோதலில் ஏற்பட்ட விளைவு" என்று தன் நிலைப்பாட்டை கூறிவிட்டது.
அந்த நிலைப்பாட்டையே சீனா, பாகிஸ்தான் அரசுப் பிரதிநிதிகள் ஆதரித்து பேசி உள்ளனர். இதனை தமிழ் தரப்பினர் "சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு முண்டு கொடுக்கிறார்கள்"" என்று கூக்குரல் இடுகின்றனர்.
இந்த பின்னணியில் ஐநாவில் தமிழர்கள் எதனை சாதிக்க முடியும்? என சற்று அலசிடுவோம்.
ஐநாவில் தமிழர்கள்
ஈழத் தமிழர்களுடைய இனப் பிரச்சனை என்பது வெறும் இலங்கை தீவுக்குள்ளோ, அல்லது இந்திர சமுத்திரத்துக்குள்ளோ மட்டுப்படுத்தி விட முடியாத உலகளாவிய அரசியலில் பிணைந்திருக்கும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும் என்பதை முதலில் ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழர்களின் பிரச்சனை என்பது இலங்கை தீவுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், அல்லது இந்து சமுத்திரத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்திருந்தால் இனப்பிரச்சினை எப்போதே தீர்க்கப்பட்டிருக்கும்.
ஆனால் ஈழத் தமிழர் பிரச்சனை என்பது அவர்கள் வாழ்கின்ற தாயகத்தின் கேந்திர தன்மை இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு அப்பால் உலகம் தழுவிய கடலாதிக்கத்துக்கும், உலகம் தழுவிய அரசியல், பொருளியல் ஆதிக்கத்துக்குமான ஒரு கேந்திரப் பகுதியில் அமைந்திருப்பதனால் அது வல்லரசுகளுடைய பிடிக்குள்ளும், மேலாண்மை வலயத்திற்குள்ளும் இருப்பதனால் இலகுவில் தீர்த்து விட முடியாது என்பதே உண்மையாகும்.
ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சனையும் அதற்கான தீர்வும் இலங்கை அரசாலோ அல்லது அண்டை நாட்டு இந்திய அரசாலோ தீர்க்கப்பட முடியாது என்பதை 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகள் மிகத் தெளிவாக வெளிக்காட்டி இருந்தது.
அதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு ரணில்-பிரபா ஒப்பந்தமும் டோக்கியோவில் இருந்து ஓஸ்லோ-டப்பிளின் வரை மேற்குலக அணியுடன் தமிழர் தரப்பு ஒத்துப்போயும் இறுதியில் யுத்தத்திலேயே வந்துநின்றது.
அது ஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலில் பேரவலத்தையும், பேரிழப்பையும் தந்ததோடு ஆயுதப் போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. இத்தகைய நிலை ஏற்பட்டதற்கான காரணங்களை இன்று வரை நாம் சரிவர எடை போடவில்லை. ஆய்வுக்கு உட்படுத்தவும் இல்லை.
ஈழத் தமிழரின் தாயக நிலம்
ஆகவே அண்டைநாடான பிராந்திய வல்லரசான இந்தியாவுடன் ஒத்துழைத்தும் அதன் பின்னர் மேற்குலகத்துடன் ஈழத் தமிழர்கள் தமக்கான தீர்வை பெற முடியவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன? சர்வதேச அரசியலின் மேலாதிக்க போட்டிக்குள் ஒற்றைப் பொருளாதாரத் தளத்தில் தோன்றி இருக்கின்ற இரட்டை அதிகார மையங்களின் போட்டிக்களமாகவும், வேட்டைக்காரராகவும் இந்து சமுத்திரம் மாறியிருப்பதும், அந்த வேட்டைக் காட்டுக்குள் ஈழத் தமிழரின் தாயக நிலம் அகப்பட்டு இருப்பதுமே காரணம் என்பதை நாம் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழர்கள் பிராந்திய வல்லரசோடோ, மேற்குலகத்தோடோ ஒத்துழைப்பது என்பதற்கும், அணி சேர்த்தல் அல்லது கூட்டுச் சேர்தல் என்பதற்கும் இடையிலே பாரிய வேறுபாடுகள் உண்டு. இங்கே ஒத்துழைப்பு என்பது எந்த நேரத்திலும் ஒத்துழைப்பை பின்வாங்கவும், கைவிடவும் முடியும். ஆனால் அணிசேர்ப்பு என்பது சேர்க்கப்பட்ட அணியிலிருந்து விலகுவது என்பதோ, கைவிடுவது என்பதோ இலகுவானது என்று அல்ல.
ஆகவே அணி சேர்தல் என்பதுவே பலமானதாகவும், நம்மை பலப்படுத்துவதாகவும் அமைவதோடு நம்மை தற்காத்துக் கொள்ளவும் அது வழிகளைத் திறந்து விடும். எனவே ஒத்துழைப்பு என்ற நிலையிலிருந்து அணிசேர்தல் என்ற நிலைக்கு ஈழத் தமிழர்கள் தம்மை தயார் படுத்த வேண்டும்.
ஈழத் தமிழர்களுடைய விடுதலைக்கான பயணத்தில் நாம் அரசுகளை அணி திரட்டாமல், அரசுகளை நமக்கு நண்பனாக்காமல், வல்லமை வாய்ந்த அரசுகளின் ஆதரவின்றி, பலம் வாய்ந்த நாடுகளின் ஆதரவின்றி ஒரு போதும் விடுதலை அடைய முடியாது. இன்றைய அரசியல் பொருளியல் உலகில் யாரும் தனித்து நின்று இயங்க முடியாது.
““சொந்தக் காலில் சொந்தப் பலத்தில் நிற்க வேண்டும்““ என்பது பேச்சுக்கு ரம்யமான உணர்வுபூர்வமான துணிச்சலான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் அது நடைமுறைக்கு ஒருபோதும் சாத்தியம் இல்லை. இந்த பூமிப் பந்தில் அணிசேராமல், கூட்டுச் சேராமல், ஒன்றில் ஒன்று தங்கி நிற்காமல் வாழ்வும் இல்லை. வலமும் இல்லை.
அவ்வாறே பரஸ்பர நலன்களின் அடிப்படையிலேயே இந்த கூட்டு சேரலும் அணிசேரலும் இடம்பெற முடியும். விடுதலை அடைகின்ற போது தமிழ் மக்களுக்கு தனியான நலன் அல்லது 100 வீத நலன் கிடைக்கும் என்று சொல்வது வெரும் கற்பனையே. அந்த விடுதலையில் அண்டை நாடுகள், பிராந்திய நாடுகள், சர்வதேச நாடுகள் என பலவற்றின் பங்குகள் கொடுக்கப்பட வேண்டும்.
பங்கு போடலும் கூட்டி சேரலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே. பங்கு போடப்படாமல், பங்கு கொடுக்கப்படாமல் இப் பூமிப்பந்தில் எதுவுமே நிகழாது. ஆகவே அவரவருக்குரிய பங்கையும், பாத்திரத்தையும் வழங்குவதன் மூலம் பரஸ்பர நலன்கள் அடையப்பட்டு அதிலிருந்தே உறவுகள் மலரவேண்டும். இந்த அடிப்படை தத்துவார்த்தை புரிந்து கொண்டால் மாத்திரமே நாம் விடுதலைக்கு தகுதியானவர்கள்.
அதை விடுத்து வெறும் கற்பனையான வீர தீரக் கதைகளையும், இலக்கிய கற்பனை கதாநாயகர் விம்பங்களையும் தமிழ் மக்களுடைய கருத்து மண்டலத்தில் வைத்துக் கொண்டு ஒரு சரியான அரசியலை நாம் முன்னெடுக்க முடியாது.
16 ஆண்டுகளாக தமிழ் சமூகம்
அவ்வாறு முன்னெடுப்பதற்கு அறிவார்ந்த ரீதியில் கருத்தைச் சொல்ல வல்லவர்கள் மீது ஆயிரம் முட்டாள்களின் கல்வீச்சுக்களும் வசைபாடல்களும் மேற்கொள்ளப்பட்டு அறிவார்ந்த கருத்தியலாளர்கள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கப்படுவர்.
இதனால் கற்பனையான தவறான கருத்தியல்கள் மேல் எழுந்து தமிழினம் மேலும் சீரழிவை நோக்கியே செல்லும். இதுவே கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் சமூகத்தில் நிலவி வருகிறது.
இந்த நிலையை போக்குவதற்கான புதிய பாதை பற்றியும், அதற்கான வழிவகைகள் பற்றியும் அறிவுபூர்வமான தேடல்களும், உரையாடல்களும் இப்போது அவசியப்படுகிறது.
அரசற்ற தேசிய இனங்களின் ஒப்பாரி மண்டபமான ஐநா மனித உரிமை ஆணையத்தில் அதனுடைய 60-வது கூட்டத்தொடரில் சீனாவும் பாகிஸ்தானும் இலங்கை இனப்படுகொலை அரசுக்கு சார்பாக இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்றும் அது பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் ஏற்பட்ட மரணங்கள் என்றும் தமிழ் மக்களின் படுகொலையை மல்லினப்படுத்தி மனித உரிமையை கருத்திக் கொள்ளாது இலங்கை அரசுக்கு முண்டு கொடுப்பதாக தமிழர் தரப்பில் இன்னுமோர் உப ஒப்பாரி தொடங்கிவிட்டது.
இங்கே தத்துவார்த்த ரீதியில் சாணக்கியன் "உனது அண்டை நாடு இயல்பான எதிரி அண்டை நாட்டின் அண்டை நாடு இயல்பான நண்பன்" எனக் கூறுகிறார்.
அந்த ரீதியில் பார்த்தால் சீனா பாகிஸ்தான் என்பன இலங்கையின் இயல்பான நண்பர்கள். இன்றைய உலகம் தழுவிய அரசியலிலும் சீனாவும் பாகிஸ்தானும் இணை பிரியாத நட்பு வட்டத்துக்குள் வந்து விட்டனர்.
பாகிஸ்தானை பொறுத்தளவில் இந்தியாவை எதிர் கொள்ள சீனாவின் ஆதரவு தேவை. அதே நேரத்தில் இந்து சமுத்திரத்தினுள் காலூன்றி, நிலைத்து நிற்பதற்கு சீனாவுக்கு பாகிஸ்தான் தேவை.
அந்த அடிப்படையில் பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தை சீனா பெற்றுக் கொண்டதிலிருந்து குவாதர் துறைமுகத்திலிருந்து கோர்க்கோம் மலைக்குன்று வழியாக சீனாவுக்கு 1800 மையில் நீளமான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பனிப்போரின் பின்னர் சீனா
பாகிஸ்தானின் தயவில் சீனா இந்துசமுத்திரத்துக்குள் நேரடியாக தரை மார்க்கமாக நுழைந்திருக்கிறது என்ற அடிப்படையில் இந்த இரண்டு நாடுகளும் இணை பிரியாத நட்பு நாடுகளாகவே தொடர்ந்து நிலைக்கும்.
சீனாவின் உலகம் தழுவிய பொருளியல் ஆதிக்கத்திற்கான பட்டுப்பாதை திட்டம் ஹான் வம்ச அரசர் ஹான் வூடி (கிமு 141–87) காலத்தில் தொடங்கப்பட்டது.
அந்த பழமையான பட்டுப்பாதை கிபி 14ம் நூற்றாண்டு அதாவது 1432-ல் சீனாவின் கடற்படை தளபதி செங்கியின் மரணத்துடன், சீனாவின் அரச வம்சங்களும் பிரபுகளுக்கும் இடையிலான உள்ளக முரண்படுகள், மற்றும் 14ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசின் சிதைவுக்குப் பின் ஒட்டோமன் பேரரசு எழுச்சியுடன் சீன நிலப்பாதை பாதுகாப்பதற்காக பட்டுப்பாதை திட்டத்தை நிறுத்த வேண்டியதாயிற்று.
வாஸ்கோட காமா, கொலம்பஸ் போன்றோர் புதிய கடல் வழிப் பாதைகளை கண்டுபிடித்து கடல் போக்குவரத்து வளர்ச்சியடைந்தமை என்பன பட்டுப்பாதையின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டது.
ஆனால் பனிப்போரின் பின்னர் சீனா உலகம் தழுவிய அரசியல் பொருளியலில் மேல் எழுந்து வரும் சக்தியாக மாறிவிட்டது.
2000 ஆண்டிற்கு பின்னர் அது உலகம் தழுவி அரசியலில் முழு முனைப்புடன் ஈடுபடத் தொடங்கி இந்து சமுத்திரத்திலும் ஆபிரிக்கா கண்டத்திலும் தனது ஆதிக்கத்தை பொருளியல் முதலீடுகள் மூலம் விஸ்தரித்து இருக்கிறது.
இன்றைய “புதிய பட்டுப்பாதை” (Belt and Road Initiative) சீனத் தலைவர் சி ஜின்பிங் 2013ல் “ஒரு வளையம், ஒரு பாதை” (One Belt, One Road) திட்டத்தை அறிவித்தார்.
“Belt” என்பது நிலவழிறிலான தொடருந்து பாதை, பெருந்தெரு, எரிவாயு குழாய் போன்ற கட்டுமானங்களை உள்ளடக்கியது.“Road” என்பது சமுத்திரங்கள் சார்ந்த துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து பாதைகள் மூலமாக சீனாவை ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா போன்ற பிராந்தியங்களுடன் வணிக மற்றும் அரசியல் ரீதியாக இணைப்பது சுருக்கமாகச் சொன்னால் சீனாவின் தேசிய நலன் என்பது பழைய பட்டுப்பாதை பண்டைய உலகை இணைத்த வணிகப் பாலம், ஆனால் இன்றைய “புதிய பட்டுப்பாதை” சீனாவின் உலகளாவிய அரசியல், பொருளாதார, ஆக்கிரமிப்பு, ஆளுகை, மேலாண்மை திட்டம் எனலாம்.
அதே நேரத்தில் சீனா 2000ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் படிப்படியாக காலூன்றி 2010ல் அது அம்பாந்தோட்டை துறைமுகத்தை பெற்றதிலிருந்தும், அதன் பின்னர் கொழும்பு துறைமுக நகரத்தை பெற்றதிலிருந்தும் இலங்கையின் நிலப்பரப்பில் ஒரு பகுதியை தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து விட்டது.
அந்த அடிப்படையில் இப்போது இந்து சமுத்திரத்தில் தன்னை நிலை நிறுத்துவதற்கு இலங்கை சீனாவுக்கு அவசியப்படுகிறது. இலங்கையில் நிலைகொண்டு இருந்தால் அமெரிக்காவின் டீகாகோசியா படைத்தளத்தை எதிர்கொள்வது இலகுவானதாக அமையும் என சீனா நம்புகிறது.
அதே நேரத்தில் இந்தியாவையும் அது முற்றுகையிடலாம் எனவும் நம்புகிறது. அதற்கேற்ற வகையில்தான் வங்கக் கடலில் மியான்மாரின் கோர்க்கோ தீவை சீனா பெற்றிருக்கிறது.
குவாதர்-அம்பாந்தோட்டை-கோர்க்கோ தீவு ஆகியவற்றை புள்ளியிட்டு இணைத்தால் அந்த இணைகோட்டுக்குள் இந்தியா முற்றுகையிடப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். அதே நேரத்தில் இந்து சமுதாயத்தில் எழுந்து வரும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் இந்து சமுத்திரத்தில் முட்டி மோதும் ஏதுநிலை தோன்றிவருகிறது.
ஈழத்தமிழர்களுக்கான அரசியல்
இந்துசமுத்திரத்தை கிழக்கு மேற்காகவும், வடக்கு தெற்காகவும் பிரிக்கின்ற பிரிகோட்டின் மையப் பகுதியில் இலங்கைத்தீவு அமைந்திருப்பதனால் இலங்கைத் தீவுக்கு என்றும் இல்லாத ஒரு முக்கியத்துவம் 21 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கிறது.
வல்லரசுகளின் போட்டி களத்துக்குள் தமிழர் தாயகம் புவியியல் ரீதியில் நிர்ணயம் பெற்றிருப்பதனால் ஈழத்தமிழர்களுக்கான அரசியலும் சிக்கலுக்கு உள்ளானதாக மாற்றம் பெற்று விட்டது.
இப்போது இலங்கை அரசுக்கு சார்பாகவே சீனா இருக்கின்றது என்ற அடிப்படையில் ஈழத் தமிழர்கள் சீனாவிடம் இருந்து எத்தகைய ஒரு ஆதரவு கரத்தையும் பெற முடியாது. இலங்கை அரசுக்கு எதிராக சீனா ஒருபோதும் செயற்படாது என்ற அடிப்படையில் ஈழத்தவர்களுக்கான ஆதரவு தளம் சீனாவில் ஒருபோதும் இருக்கப் போவதில்லை.
அதனைத்தான் இப்போது ஐநா மனித உரிமை அவையின் கூட்டத்தொடரில் சீனப் பிரதிநிதிகள் தெளிவாக கூறிவிட்டனர். எதிரியின் நண்பன் இயல்பான உன் எதிரி, உனது எதிரியின் எதிரி உனது இயல்பான நண்பன் என்ற தத்துவார்த்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே இலங்கை அரசு தமிழர்களின் இயல்பான நிரந்தர எதிரி என்ற அடிப்படையில் நிரந்தர எதிரியின் நண்பன் ஈழத் தமிழர்களின் நிரந்தர எதிரியாகவே இருக்க முடியும்.
மேலும் ஒக்டோபர் 8 வரை இடம்பெறும் ஐநா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கை தமிழர்களுக்கு சார்பாக வருமோ? வராதோ? என்று ஐயப்பாடுகளுக்கு அப்பால் ஐநா பொதுச் சபையில் வீட்டோ அதிகாரத்தை கொண்டுள்ள சீனா இலங்கைக்கு ஆதரவாக தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து நிலை எடுத்திருப்பது என்பது ஐநா மன்றத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற எந்த ஒரு தீர்மானத்தையும் இலங்கைக்கு எதிராக செயற்படுத்த முடியாமல் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும்.
ஆகவே ஐநா மனித உரிமை அவையினால் இலங்கைக்கு எதிரான எந்த ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அந்த தீர்மானத்தை ஐநா பொதுச் சபையிடம் சபையிடம் விண்ணப்பிக்கும் உரிமம் மாத்திரமே மனித உரிமை சபைக்கு உண்டு என்ற அடிப்படையில் மனித உரிமைச் சபையினால் வெறும் காகித அறிக்கையை மாத்திரமே வெளியிட முடியும்.
அந்த அறிக்கை கூட தமிழர்களுக்கு சார்பானதாகவோ அல்லது தமிழர்களை பலப்படுத்தக் கூடிய வகையிலோ அமையும் என்றும் சொல்வதற்கில்லை. ஒரு பலவீனமான காகித அறிக்கையை மாத்திரமே ஐநா மனித உரிமை ஆணையத்தினால் வெளியிட முடியும்.
அது தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் பெற்று தருவதற்கான வாய்ப்பையும் கொடுக்காது. எனவே சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுகின்றன என ஒப்பாரி வைப்பதில் இந்தப் பயணம் கிடையாது.
ஆகவே தமிழர்கள் தம்மை ஜனநாயக ரீதியில் தமிழ் தேசியக் கட்டுமானங்களை சரிவரச் செய்து அனைத்து தமிழ் தரப்பினரையும் ஒன்றிணைத்து பலம் வாய்ந்த ஒரு ஜனநாயகக் கட்டமைப்பின் ஊடாக பலம் வாய்ந்த அரசுகளையும், வல்லமை வாய்ந்த அரசுகளையும் எமக்குச் சார்பாக அணி திரட்டுவதன் மூலமே எமக்கான உரிமைகளைப் வென்றெடுக்க முடியுமே அன்றி இந்த ஒப்பாரி மண்டபங்களில் தஞ்சமடைந்து அதனைமாத்திரமே நம்பி அங்கிருந்து ஒப்பாரி வைப்பதனால் எமக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 21 September, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 1 மணி நேரம் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
