ஜனாதிபதி நாடு திரும்பியதும் புதிய அமைச்சரவை பதவியேற்கும்:நாமலுக்கு கிடைத்த ஏமாற்றம்
பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியவுடன் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவை அடுத்த மாதம் பதவியேற்கும்
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை கோரி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொடுத்து வந்த கடுமையான அழுத்தங்கள் காரணமாக புதிய அமைச்சரவை பதவியேற்பது நாளுக்கு நாள் தாமதமாகி வந்ததாக கூறப்படுகிறது.
புதிய அமைச்சரவை அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிக்குள் பதவியேற்கும் எனவும் அவ்வாறு அமைச்சரவை பதவியேற்க முடியாது போனால், அரசாங்கத்தின் இருப்பு பெரும் நெருக்கடிக்கு உள்ளாக கூடும் எனவும் பேசப்படுகிறது.
நாமலுக்கு அமைச்சு பதவி கிடைக்காது- கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கடுமையான நிலைப்பாடு
அதேவேளை புதிய அமைச்சரவையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு மாத்திரம் அமைச்சு பதவி கிடைக்காது என தெரிவிக்கப்படுகிறது.
நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் அழுத்தம் கொடுத்த போதிலும் அந்த கட்சியை சேர்ந்த ஒரு அணி, நாமல் ராஜபக்ச இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சராக நியமிக்கப்படுவது பொருத்தமற்றது என்ற கடும் நிலைப்பாட்டில் இருப்பதால், அவரை அமைச்சராக நியமிப்பதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் எதிர்ப்புகளை எதிர்நோக்கி வந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன, பவித்ராதேவி வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, சரத் வீரசேகர ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவிக்கு கொண்டு வருவதற்காக திரைக்கு பின்னால் இருந்து பெரும் பங்காற்றியதாக கூறப்படும் ஐக்கிய தேசியக்கட்சியின் வஜிர அபேவர்தனவுக்கு முக்கியமான அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய அமைச்சரவையின் எண்ணிக்கை 35க்கும் மேற்பட்டதாக இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.