நாமல் ராஜபக்ச கைது விவகாரம்! மக்களை திசை திருப்பும் நடவடிக்கை - ரோஹித விசனம்
தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தே தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. எனினும், கடந்த இரண்டு வருடங்களில் மக்களின் எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.
நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கை
டீசல், பெட்ரோல் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாக அரசு வாக்குறுதி அளித்திருந்த போதிலும், தற்போது அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விலை உயர்வின் காரணமாகப் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளன. தேநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.

வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் விவசாயிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியைத் தடுக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியினரைக் கைது செய்வதன் மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அரசு முயற்சிக்கிறது.
எனினும், இத்தகைய நடவடிக்கைகளால் திட்டமிட்டபடி மக்கள் பேரணியைத் தடுத்துவிட முடியாது. 2015ஆம் ஆண்டிலும் அரச பலத்தை வெளிப்படுத்தித் தமக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகக் காட்டிய அரசு இறுதியில் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தற்போதைய அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
அரசமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகள் ஊடாக எதிர்க்கட்சியை அழிக்க முயற்சிப்பது தற்காலிகமான நடவடிக்கையாகவே அமையும். அது நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது" என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24