எதிர்க்கட்சியினர் முறையான நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர்: நளிந்த ஜயதிஸ்ஸ
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகச் சமர்ப்பிக்க எதிர்க்கட்சியினர் தவறிவிட்டதாக அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (03.11.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
மேலும் தெரிவிக்கையில், எனினும் உரிய நடைமுறைகளுக்கு அமைவாக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால், அதனை விவாதித்து தோற்கடிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, நீதிமன்ற விசாரணையில் உள்ள விடயங்களை நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்க முடியாது எனத் தெரிவித்தார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணை
எனவே, “நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பியுங்கள். அதனைத் தோற்கடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் கூறினார்.
அத்துடன், கறுப்பு ஜூலை சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணையின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கத்திலேயே எதிர்க்கட்சியினர் இன்று தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.