இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மருந்து தொடர்பில் இந்திய நிறுவனம் கருத்து
பிறப்பொருள் எதிரி குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மனித இம்யூனோகுளோபின் மருந்துகளை இலங்கைக்கு வழங்க, ஆயுர்வேத மருந்துகளை கையாளும் இந்தியாவின் ஆயுர்வேத நிறுவனம் ஒன்றுக்கு கேள்விப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்றில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட சன்ன ஜயசுமன, காமினி வலேபொட, துமிந்த திசாநாயக்க, உதய கம்மன்பில, சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்தும பண்டார, வாசுதேவ நாணயக்கார மற்றும் குணபால ரணசிங்க ஆகியோர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
ஆயுர்வேத மருந்துகளை வழங்குவதற்காக மட்டுமே இந்திய நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போலி ஆவணங்களில் மருந்து இறக்குமதி
இந்த நிறுவனத்துக்கு மனித இம்யூனோகுளோபின் வழங்குவதற்காக ஒரு பில்லியன் ரூபாய் கேள்விப்பத்திரம் வழங்கப்பட்டதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்;டுள்ளது.
நோயாளிகளுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும், இது முதன்மை நோயெதிர்ப்புத் திறனின் மிகவும் பொதுவான வகையாகும்.
இந்தநிலையில் போலி ஆவணங்களில் இந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது உண்மையெனில், தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இம்யூனோகுளோபுலின் மருந்துகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இந்திய மஹாராஸ்டிரா சேர்ந்த இந்திய நிறுவனம், இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
இலங்கை இறக்குமதியாளர், அத்துடன் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட துறைமுகம் மற்றும் இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட துறைமுகம் பற்றிய விபரங்களைக் கேட்டு இந்த இந்திய நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
மோசடி நிறுவனங்கள்
அத்துடன் இந்தியாவின் மத்திய, மாநில மற்றும் பிராந்தி உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் இந்திய சுங்கம் ஆகியவற்றில் அதிகாரப்பூர்வமாக முறையிடப்படும் என்றும் இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.
உண்மையான ஏற்றுமதியாளர்களின் நற்பெயரைக் காப்பாற்ற இதுபோன்ற வேண்டுமென்றே மோசடி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்று குறித்த இந்திய நிறுவனம் கேட்டுள்ளது.
அத்துடன் இந்த இந்த தயாரிப்புகளை தாங்கள் இதுவரை எந்த தரப்பினருக்காகவும் உற்பத்தி செய்யவில்லை அல்லது ஏற்றுமதி செய்யவில்லை என்றும் இந்திய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த இம்யூனோகுளோபுலினை யார் கொள்வனவு செய்தார்கள் என்பதைக் கண்டறிய இன்னும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என்று மருத்துவ சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.