தெற்கு கடற்கரையில் மிதந்து வந்த மர்ம பொதிகள்.. அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
புதிய இணைப்பு
மிரிஸ்ஸ கடற்பகுதியில் நேற்றைய தினம் (28) கண்டெடுக்கப்பட்ட பொதிகளில் ஐஸ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 17 மூட்டைகள் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு பெண் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் இரண்டு வாகனங்களும் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
கடற்படைக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், கடலோரக் காவல்படையுடன் இணைந்து மிரிஸ்ஸ - தலாரம்ப பகுதியில் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையின் தெற்கு கடற்கரையான மிரிஸ்ஸ, தளாரம்ப பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு நடவடிக்கையின்போது, போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் 16 மூட்டைகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடலோரக் காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் தகவலின்படி, போதைப்பொருள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 16 மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிகாரிகளின் நடவடிக்கை
இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சரக்குகளை கரைக்கு கொண்டு வரப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சிறிய படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையிடமிருந்து கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இன்று (28) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இந்தப் போதைப்பொருள் சரக்கு, கரையில் இறக்கப்பட்டுக் கொண்டிருந்த போது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடலோரக் காவல்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் கொடூரமாக கொலை செய்து புதைக்கப்பட்ட நடன கலைஞர்! நண்பர்கள் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலங்கள்