கொழும்பில் காணாமல்போன இளைஞர்! கொடூரமாக தாக்கி கொலை செய்து புதைத்த நண்பர்கள்
கொழும்பு - கெஸ்பேவ பகுதியில் காணாமல்போன 30 வயது இளைஞரொருவர் கொலை செய்யப்பட்டு காட்டில் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருவலவத்த பகுதியை சேர்ந்த இந்த இளைஞர் கடந்த 23ஆம் திகதி கெஸ்பேவ பகுதிக்கு தனது நண்பரை சந்திக்க செல்வதாக கூறி வெளியேறிய நிலையில், காணாமல்போயிருந்ததாக அவரது மனைவி பேராதனை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
வாக்குவாதம்
அதன்படி, பேராதனை பொலிஸார் அளித்த தகவலின் அடிப்படையில் கெஸ்பேவ பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், இந்த கொலை குறித்த தகவல் வெளிப்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 23ஆம் திகதி காலையில், சம்பந்தப்பட்ட இளைஞர் தனது நண்பரை சந்திக்க சென்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு காரணமாக, நண்பர் மற்றொரு குழுவினருடன் சேர்ந்து இளைஞரை கொலை செய்து, அவரது உடலை வனப்பகுதியில் புதைத்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
நீதித்துறை விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்களை கெஸ்பேவ பொலிஸார் நேற்று (28) கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு 20, 36 மற்றும் 37 வயது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், உடல் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் இன்று (29) நீதித்துறை விசாரணை நடத்தப்பட உள்ளது.
சம்பவம் குறித்து கெஸ்பேவ பொலிஸ் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றது.