முத்துநகர் விவசாயிகளின் நிலையை அறியுங்கள்: அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கும் விவசாயிகள்
வடக்கு, கிழக்கு என்பது தமிழர் தாயகம் என்றவாறு இருந்த போதிலும் தொடரான தனியார் நிலங்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் அபகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதன் ஒரு சம்பவமாக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முத்து நகர் விவசாயிகளின் சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் சூரிய மின்சக்தி அபிவிருத்தி என்ற போர்வையில் அபகரித்துள்ளனர்.
53 வருட காலமாக விவசாயம் செய்து வந்த விவசாயிகளின் நிலையே தற்போது இவ்வாறாக மாறியுள்ளது.
போராட்டங்கள்
குறித்த காணிகளை மீளப்பெற்றுத்தரக்கோரிய பல போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்தனர். ஜனாதிபதி செயலகம் தொடக்கம் பிரதமர் அலுவலகம் வரை கண்ணீர் வடித்து போராடிய போதும் தீர்வு கிடைக்கவில்லை. இதனை பொருட்படுத்தாது சுமார் 70 நாட்களாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை திருகோணமலை மாவட்ட செயலகம் முன் தீர்வு கோரி முன்னெடுத்தனர்.
போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் வெற்றியடையவில்லை.அப்பாவி விவசாயிகளை கைது செய்தும் சிறையில் அடைத்த வரலாறுகளும் உண்டு. இவ்வாறான நிலையில் பேரிடர் மற்றும் திட்வா புயல் காரணமாக போராட்டத்தை கைவிட்டார்கள்.

ஆனாலும் 352 விவசாயிகளும் வாழ வழியின்றி தங்களது அன்றாட ஜீவனோபாயத்தை கழிப்பதில் பெரும் துன்பத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் பாடசாலை செல்லும் பிள்ளைகள்,அன்றாட செலவுகள் என பல இன்னோரன்ன சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இது குறித்து இலக்கு மின்னிதழுக்கு முத்து நகர் தகரவெட்டுவான் ஒன்றினைந்த விவசாய சம்மேளனத்தின் செயலாளர் திருமதி சஹீலா சபூர்தீன் தெரிவிக்கையில் "முத்து நகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 70 நாட்களாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர்ந்தது.
அதன் பின்னர் துரதிஷ்டவசமாக இயற்கை பேரிடர் காரணமாக அது எங்களுக்கு சாதகமாக இன்றி அரசுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் எங்கள் போராட்டத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.அப்போதைய போராட்ட நாட்களில் பிரதமர் அலுவலகம் ஊடாக பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டிருந்த போதிலும் அதுவும் போதாது என கூறி ஏமாற்றப்பட்டோம்.
அதன் பின்னர் கடந்த வருடம் (2025) ஒக்டோபர் ,நவம்பர் வரையான காலப்பகுதியில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம்,தம்பலகாமம்,கிண்ணியா,குச்சவெளி ஆகிய நான்கு பிரதேச செயலகங்கள் ஊடாக விவசாயிகளின் தகவல்கள் திரட்டப்பட்டது.
சூரிய மின்சக்தி உற்பத்தி
ஆனால் தற்போது வரைக்கும் தீர்வு கிடைக்கவில்லை.தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதியமைச்சரால் 2024,2025 க்கான பெரும்போக செய்கைகளுக்கான நஷ்ட ஈடும், மாற்றுக் காணிகளும் தருவதாக கூறியே விவசாயிகளின் தகவல்களை திரட்டினார்கள்.
352 விவசாயிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய விவசாயிகள் இங்கு இருந்த போதும் அந்த பட்டியலில் இருந்து விவசாயிகளின் விபரங்களை எவ்வாறாக குறைக்க முடியும் என்பதை வைத்தே இவர்கள் தகவல் திரட்டியதாக அறிந்து கொண்டோம்.
இதன் போது விவசாயிகளில் அரச உத்தியோகத்தர்கள் உள்ளார்களா? ,மோட்டார் சைக்கிள் உள்ளதா என கட்டம் கட்டமாக விபரங்களை திரட்டினார்கள் என்பதையும் அறியக்கூடியதாக இருந்தது.

352 விவசாய குடும்பங்களின் 800 ஏக்கர் விவசாய காணிகளை அள்ளி சுருட்டி சூரிய மின்சக்தி உற்பத்திக்காக கொடுத்தார்கள் இதற்கு நாங்கள் எதிர்ப்பில்லை. அதற்கு பதிலாக மாற்று நிலங்களை தாருங்கள் என்றே கேட்கிறோம்.
அதை வைத்து ஜீவனோபாயத்தை கொண்டு செல்வோம்.அரச ஊழியர் என்று சாட்டு போக்குகளை இங்கு கூறாமல் அவர்களுக்கு குத்தகைக்காவது தாருங்கள் இவர்களில் வேறு சொந்த வயல் நிலங்கள் இருந்தால் அவர்களை நீக்குங்கள்.இவ்வாறாக தீர்வுகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக நேரிட்ட போதிலும் அது பலன் அளிக்கவில்லை.
ஜனாதிபதி தொடக்கம் கீழ் மட்ட பிரதிநிதிகள் வரை எங்களுடன் கதைக்க தயாரில்லை.அப்போதைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது எஞ்சிய நிலங்களில் விவசாய செய்கையில் ஈடுபடலாம் என கூறிய போதிலும் எங்களை தற்போது வரை செய்ய விடாது தடுத்துள்ளனர். அதனை அண்டிய அம்மன்குள விவசாயிகள் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பொருளாதார கஷ்டங்கள்
இதன் போது ஆளுநர் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் இருந்தனர். தீர்வு இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளோம்.எமது விளை நிலங்களை அழித்து குளங்களை நாசமாக்கியுள்ளனர். டித்வா பேரிடரின் பின்னர் கூலி தொழில்களுக்கு கூட செல்ல முடியாது பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளோம்.
எங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் காது கொடுத்து கேட்கவில்லை. எமது பிரச்சினைகளுக்கு செவிமடுத்து ஆக்கபூர்வமான தீர்வை பெற்றுத்தர வேண்டும்.
ஆகவே எங்களுக்கான மாற்று நிலங்களை தாருங்கள் அதன் மூலமாவது வாழ்வாதாரத்தை சீவிப்போம் எனவும் கோரிக்கையை உரிய அரச தரப்புக்களுக்கு முன்வைப்பதாக மேலும் தெரிவித்தார்.

இவ்வாறாக பாரிய பொருளாதார கஷ்டங்களை நெற்செய்கைக்காக காத்திருந்த விவசாயிகள் அநுர அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் ஆட்சிக்கு வரமுன்னர் தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு சார்பாகவும் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் வீதிக்கு இறங்கி பல போராட்டங்களை முன்னெடுத்தனர்.
தற்போதைய நிலையில் அதனை மறந்து அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிநாட்டு தனியார் கம்பனிகளுக்காக மக்கள் நிலங்களை அடாத்தாக வழங்கியுள்ளனர்.
தீர்வு
இது குறித்து தீர்வுக்காக தொடராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயியான பாபு தெரிவிக்கையில் "போராட்டம் மூலமாக வெல்வோம் என்ற நம்பிக்கையில் போராடினோம். ஆனால் விவசாய காணிகளை நம்பிய போதும் முடிவு எட்டவில்லை. இதனால் 352 விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்வுகளை தருவதாக கூறி முத்து நகர் விவசாயிகளை நடுத்தெருவுக்கு தள்ளியுள்ளனர். ஜனாதிபதி செயலகம் வரை போராட்டத்தில் ஈடுபட்டோம் உங்களை நம்பியே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தோம்.

எனவே எங்கள் போராட்டத்தை மீண்டும் தொடர்வோம். உயிர் போனாலும் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம். தமிழ் ,முஸ்லீம் என்ற பேதமின்றி இனவாதமின்றிய நிலையில் எங்கள் காணிகளை பெற்றுத்தாருங்கள்.
ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களே சுமூகமான தீர்வை தராவிட்டால் போராட்டம் மீண்டும் வெடிக்கும் எனவே தீர்வு தருவோம் அல்லது தரமாட்டோம் என்ற பதிலையாவது பெற்றுத்தாருங்கள் எனவும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அப்பாவி விவசாயிகளை கடந்த பல மாத காலமாக ஏமாற்றியுள்ளதை முத்து நகர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் இருந்து தெரியவருகிறது.
இவர்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் ஒரு கதையையும் ஆட்சிக்கு வந்தததன் பின்னர் முன்னுக்கு பின்ன் முரணான கருத்துக்களையும் கூறிவருகின்றனர். குறித்த விவசாயிகள் நெற்செய்கை விவசாயத்தை நம்பியே வாழ்வாதாரமாக கொண்ட நிலையில் தற்போது பல கஷ்டங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணம் அதிகளவாக விவசாயம்,மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். விவசாயத்தை தவிர வேறு தொழில்கள் தங்களுக்கு தெரியாது எனவும் இப்போது ஒரு நேர சாப்பாட்டுக்கு கூட கையேந்த வேண்டிய நிலையும் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே முத்து நகர் விவசாயிகளுக்கான தீர்வை ஆட்சியில் உள்ள அரசாங்கம் மூலமாக விரைவான தீர்வை வழங்க வேண்டும் என்பதை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 19 January, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.