முள்ளிவாய்க்கால் மீண்டுமொரு தோல்வியை நோக்கி நம்மை கொண்டு செல்லுமா..!
முள்ளிவாய்க்கால் (Mullivaikal) என்பது முடிவல்ல.அது மற்றொன்றின் ஆரம்பம் என்று ஆழமாக வேரூன்றிய எண்ணக்கரு சார்பாக அதன் நிலைத்திருத்தல் தொடர்பில் கேள்விகள் தோன்றுவதை தவிர்க்க முடியாத ஒரு சூழல் உருவாகி வருகின்றது.
முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட மண்ணாக முள்ளிவாய்க்கால் மண் அமைந்துவிட்டது.
இறுதிப்போரின் போக்கினை மற்றொரு வலுவான திசைக்கு மாற்றியிருந்திருக்க முடியும்.எனினும் அது அன்று சாத்தியமில்லாதது போகவே முள்ளிவாய்க்கால் மண்ணில் அதனை மௌனிக்கும் சூழல் தோன்றியுள்ளது.
ஈழப்போராட்டத்தின் செயற்பாடுகளில் சில மாற்றங்களை முன்னெடுத்திருப்பின் உலக வரலாற்றில் மற்றொரு ஸ்டாலின் கிராட்டாக புதுக்குடியிருப்பு இருந்திருக்கும்.அப்படி நடந்திருந்தால் முள்ளிவாய்க்கால் ஒரு போர்ப் பூமியாக மட்டுமே இன்று இருந்திருக்கும்.
எனினும் இன்றும் கூட அது தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளோ அன்றி தமிழ் சிவில் சமூகத் தலைவர்களோ அல்லது ஈழத்தமிழ் சிந்தனையாளர்களோ சிந்திக்கத் தலைப்படாதது முள்ளிவாய்க்கால் மீண்டுமொரு தோல்வி நோக்கி ஈழத்தமிழரை நகர்த்திச் செல்லும் என்பதில் வலுவான சந்தேகம் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.
முள்ளிவாய்க்கால் மண்
2009ஆம் ஆண்டு மே 18இற்கு பிறகு வந்த ஒவ்வொரு மே18உம் வலுவான கனத்த நாட்களாக கடந்து போயிருந்தன.
இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்துவிட்ட மக்கள் போக எஞ்சிய மக்கள் தங்களின் மரணித்து விட்ட உறவுகளை நினைவு கொள்ளும் மகத்தான நாளாக மே 18 அமைந்துள்ளது.
இந்த வருடமும் மே வந்துவிட்டது.மே 18 நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இருக்கும் இடம் மாறிக் கொண்டிருப்பதனை அவதானிக்கலாம்.
இலங்கை புலனாய்வாளர்கள் சிலர் முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலுக்கு செல்லும் பிரதான சந்தியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
சிவப்பு மஞ்சள் கொடிகளைக் கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவுத்திடல் அலங்கரிக்கப்பட்டு தீபங்கள் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எல்லாம் இயல்பாகவே நடந்து கொண்டிருக்கின்றது.அந்த இயல்பான நிகழ்வுகளின் நகர்வுகளிடையே ஏற்படுத்தக்கூடிய புதிய நல்ல செயற்பாடுகளை அவர்கள் தவறவிட்டிருப்பது கவலைக்குரியது.
நினைவுத் திடல்
பல ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஊடகவியலாளர்களின் வருகை மே 17இல் முள்ளிவாய்க்கால் நினைவுத் திடல் நோக்கி அமைந்திருந்தது.
நினைவுத் திடலில் ஏற்பாடுகளை ஒழுங்கமைத்தவாறு இருந்தவர்கள் அவர்களை வரவேற்று நினைவுத் திடல் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான செய்தி சேகரிப்புக்கு உதவியிருந்தனர்.
செய்திக்காகவும் ஆவணமாக்கலுக்காகவும் என ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் வருகையும் அண்மைய நாட்களில் முள்ளிவாய்க்கால் நோக்கியதாக அமைந்திருப்பதும் நோக்கத்தக்கது.
முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் பற்றிய நினைவுகள் அந்த களத்தில் இருந்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை.ஆயினும் 2009இல் இளையவர்களாகவும் அப்போது பிறந்தவர்களும் அதன் பின்னர் பிறந்தவர்களும் அறிந்து கொள்வதற்கு ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது.
இலக்கியப் படைப்புக்கள்
இளையவர்களுக்கு ஊடகங்கள் வாயிலாக தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.அதன் மூலம் அவர்கள் தங்கள் தேடலை மேற்கொள்ள முற்படுவார்கள் என்பது நோக்கத்தக்கது.
முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த போரின் கொடூரங்களையும் ஈழத்தமிழர் பட்ட துயரங்களையும் உள்ளீர்த்து எழுந்த இலக்கியப் படைப்புக்களும் அவற்றை சார்ந்து எழுதப்படும் செய்திகளும் இளையவர்களுக்கு முள்ளிவாய்க்காலை நிதர்சனமாக உணர்ந்து கொள்ள வழியேற்படுத்தி வருகின்றன என்பது திண்ணம்.
இதுமட்டுமல்ல ஊடகங்களின் செயற்பாடுகளால் இன்னும் பல அனுகூலங்களை ஈழத்தமிழ்ச் சமூக பெற்றுவிடும் என்பதால் ஊடகவியலாளர்களின் வரவேற்பு ஏற்புடையதே! அது கட்டாயமானதும் கூட.
கண்டுகொள்ளாத போக்கு
புலம் பெயர் நாட்டில் இருந்து விசுவமடு வந்திருந்த வயதான இருவர் முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலுக்கு இன்றைய தினம் (17.05.2024) முற்பகலில் வந்திருந்தனர்.
முள்ளிவாய்க்காலில் உள்ள பாடசாலைக்குச் செல்லும் மாணவன் ஒருவனை தங்களின் வழிகாட்டியாக அழைத்துக் கொண்டு அவர்கள் வந்திருந்தனர்.
மே 18 நினைவு நிகழ்வுகளுக்காக ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த அந்த சூழலை பார்வையிட்டவர்கள் அந்த மாணவனிடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய தகவல்களை பெற்றிருந்தனர்.
நினைவுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு போக முடியுமா என அறிய முயற்சித்தவர்களுக்கு அந்த சிறுவனால் இல்லை .அங்கு போக விடமாட்டார்கள்.நாளைக்குத் தான் போக முடியும் என எடுத்துரைக்கப்பட்டது.இதனால் அவர்கள் மீண்டும் விசுவமடுவுக்கே திரும்பிப் போக நேர்ந்திருக்கிறது.
அவர்கள் பேரூந்துக்காக காத்திருந்த வேளை விடயமறிந்த ஆசிரியர் ஒருவர் அவர்களுடன் நிலைமையை விளக்கி இல்லை நீங்கள் போக விரும்பினால் இன்றும் போய்ப் பார்க்கலாம் வாருங்கள் என அழைத்த போதும் தாங்கள் நாளை மீண்டும் வருவோம்.அப்போது பார்க்கலாம் என பதிலுரைத்ததாக அந்த ஆசிரியர் இது தொடர்பில் கருத்துரைத்து இருந்தார்.
மக்கள் மயப்படாத போராட்டங்கள்
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்காக ஏற்பாடுகளை முன்னெடுக்கும் அதே வேளை அந்த நினைவுத் திடலுக்கு வரும் புதிய மனிதர்களை வரவேற்று முள்ளிவாய்க்கால் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு வரவேற்புக் குழுவை உருவாக்கி அவர்களை முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலில் செயற்பட வைத்திருக்கலாம்.
அப்போது தான் நினைவுத் திடலுக்கு வரும் புதியவர்களுக்கு விரைவாக தொடர்புகளை ஏற்படுத்தி முள்ளிவாய்க்கால் தொடர்பான தங்கள் தேடல்களை இலகுவாக்கிக் கொள்ள முடியும்.
மக்கள் மயப்படாத எந்தவொரு போராட்டங்களும் வெற்றி நோக்கி நகர்வதில்லை என ஈழத்தமிழர்களின் தேசியத்தலைவர் குறிப்பிடுவது இங்கே நோக்கத்தக்கது.
பதினைந்தாண்டுகள் கடந்த பின்னும் உயிர்ப்போடு இருப்பதாக ஊடகங்களால் காட்டப்படும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை அதிகமானோர் மறந்து சென்று கொண்டிருக்கின்றனர் என்பது கசப்பான உண்மையே!
ஊடகங்கள் அரசியலாளளர்களோடு இணைந்து பயணிக்கும் போக்கினால் சிறிய அரசியல் முன்னெடுப்பும் பெரியளவில் காட்டப்பட்டு விடுவதால் அது படித்த அல்லது வாசிப்பாற்றல் உள்ள மற்றும் தேடலுள்ளவர்களிடையேயும் அரசியல் புலங்களிலும் பேசுபொருளாகி விடுகின்றன.
அடித்தட்டு மக்களின் மனங்களில் இருந்து எழும் உணர்வெழுச்சிகளே ஒன்று திரண்டு வலுவான ஈழப்போராட்டத்தை முன்னெடுக்கும்.இல்லையெனில் முள்ளிவாய்க்கால் நினைவும் கூட ஊடகங்களிலும் காகிதப் புத்தகங்களிலும் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும்.
இன்றைய இளையவர்கள்
இன்று ஈழத்தில் பல இளையவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலும் அதன் நிகழ்வுகளும் வெறும் ஒரு நிகழ்வாகவே உணர்த்தப்பட்டது வருகின்றது.
பலருக்கு முள்ளிவாய்க்கால் தொடர்பான நிகழ்வுகளும் அதன் போது ஈழத்தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்களும் அவை தொடர்பான நியாயப்பாடுகளும் தர்க்கரீதியாக எடுத்துரைக்கப்டுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது.
அவ்வாறு ஒரு முன்னெடுப்பு நடந்திருந்தால் மே 17 நிகழ்வில் அதிகளவான இளையவர்களை அவதானித்திருக்க முடியும்.அப்படியொரு அவதானிப்பு இளம் தலைமுறையினருக்கு ஈழத்தமிழரின் கடந்தகால வரலாற்றுத் தெளிவு இருப்பதை உணர்த்தும்.
இத்தகைய பொருத்தப்பாடான தன்னார்வமாக சூழலைப் புரிந்து செயற்படக்கூடியதாக ஒரு சமூகத்தைத் தோற்றுவிக்க ஈழத்தமிழர்கள் போராட வேண்டும்.இதுவரையுமான தங்களின் விடுதலைப் போராட்டத்தின் செயற்பாடுகளை விரிவான அரசியல் தளத்திற்கு விரிவுபடுத்த வேண்டும். அடித்தட்டு மக்களுக்கும் யாதார்த்தமான உண்மைகள் உணர்த்தப்பட வேண்டும்.
எல்லோராலும் ஈழப்போராட்ட நியாயத்தினை எடுத்து விளக்கும் வகையில் அவர்களுக்கு தெளிவூட்டப்பட வேண்டும்.அப்போது தான் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான போராட்டம் உலகமயமாகிப் போகும்.தமிழர்களின் நியாயப்பாடுகளை உலகம் ஏற்று அவர்களுக்கான ஒரு தாயகத்தின் தேவையை புரிந்துகொள்ளும்.
எனினும் இந்த பக்கம் பற்றிய வலுவான முன்னெடுப்புக்கள் 2009 க்கு முன்னரும் சரி பின்னரும் சரி அதிகளவில் இல்லை என்பதை வரலாற்றை ஆராயும் போது அறிந்துகொள்ள முடியும்.ஏன் இதுவரை அது தொடர்பில் ஈழத்தமிழ் சிந்தனையாளர்களாலோ அல்லது அரசியல் பரப்பின் தலைவர்களாலோ சிந்தித்து வலுவான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்ற கேள்விக்கு விடை....
ஈழம் யாருக்கு வேண்டும் என்ற கேள்விக்கு ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் அதற்கான நியாயத்தினை எடுத்தியம்பக்கூடிய அளவிற்கு தங்களின் வரலாற்றை தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.அதற்கு முள்ளிவாய்க்கால் நிகழ்வும் ஒரு காரணியாக ;ஒரு பாதையாக அமையும்.அந்த நிகழ்வின் மக்கள் மயமாக்கலின் அளவு இன்னமும் அதிகரிக்கப்பட வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 17 May, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.