திடீரென பதவி விலகிய துபாயின் முக்கிய தொழிலதிபர்.. எப்ஸ்டீனுடனான தொடர்பால் சர்ச்சை
துபாயில் உள்ள உலகளாவிய துறைமுக சேவை நிறுவனம் ஒன்றின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சுல்தான் அஹ்மத் பின் சுலயேம், பதவி விலகியுள்ளார்.
அமெரிக்காவில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் குறித்து வெளிவந்த ஆவணங்களுக்குப் பிறகு தொடர்ந்த அழுத்தங்களால் அவர் இந்த திடீர் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக வெளியிடப்பட்ட கோப்புகளின் படி, எமிரேட் தொழிலதிபரான சுலயேம், எப்ஸ்டீனுடன் பத்தாண்டுகளுக்கு மேலாக, நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் பரிமாறிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி வெளியான அறிவிப்பு
குறித்த நிறுவனம், அவரது பதவி விலகல் “உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என இன்று அறிவித்துள்ளது. புதிய தலைவராக எசா காசிம் மற்றும் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக யுவராஜ் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து சுலயேமின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆறு கண்டங்களில் துறைமுக முனையங்களை இயக்கி, உலக வர்த்தக கட்டமைப்பில் முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம், அண்மைய நாட்களில் அதனுடன் இணைந்து செயல்படும் பல நிறுவனங்களின் அழுத்தத்தை எதிர்கொண்டது.
பிரித்தானியாவின் அபிவிருத்தி நிதி முகமை மற்றும் கனடாவின் இரண்டாவது பெரிய ஓய்வூதிய நிதி நிறுவனம், தொடர்புடைய நிறுவனத்தில் புதிய முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.