தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழினப் படுகொலை நினைவு நாள்! (Photos)
தமிழினப் படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப்படுகொலைக்கு நீதி கோரியும், முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகிறது.
மன்னார்
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இன்றைய தினம் (17.05.2023) முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு அடம்பன் பகுதியில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது,
பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.
நினைவு அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்ட பகுதிகளில் “தமிழினப் படுகொலை நினைவு நாள் மே-18” எனும் தொனிப்பொருளில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, வெள்ளைக்கொடி மற்றும் வெள்ளை நிற தோரணங்கள் பறக்கவிடப்பட்டுள்ளது.
செய்தி: ஆஷிக்
கொடிகாமம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் கொடிகாமம் நகர மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை (17.05.2023) அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கிளைத் தலைவர் செல்வரத்தினம் மயூரன் தலைமையில் நினைவேந்தல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள், முச்சக்கரவண்டிச் சங்கத்தினர், தனியார் சிற்றூர்திச் சங்கத்தினர் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந் நினைவேந்தலின் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் பகிரப்பட்டது.
செய்தி: திலீபன்
கிளிநொச்சி
முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது.
வாடகை வாகன உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் டிப்போ சந்தியில் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று (17.05.2023) இடம்பெற்றது.
இதன்போது, பொதுச்சுடர் ஏற்றப்பட்டும், நினைவு படங்களிற்கு மலர் மாலை அணிவித்து, ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.
இதன்போது மக்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக வர்த்தகர்களின் ஒழுங்குபடுத்தலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
மேலும் கிளிநொச்சி வைத்தியசாலை முச்சக்கர வண்டி தரிப்பிட உரிமையாளர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்விலும் பலர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி தயாரித்து வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: எரிமலை
யாழ்ப்பாணம்
இன்றையதினம் தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இதன்போது மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்தியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி: கஜின்ந்தன்
மன்னார்
தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (17) புதன்கிழமை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.
இதன் பொழுது பொது மக்கள், வர்தகர்கள், சாரதிகள் உட்பட அனைவருக்கும் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கிவைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் நாடா ளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தமிழரசு கட்சியின் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அதே நேரம் மன்னார் தோட்டவெளி பகுதியிலும் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தோட்டவெளி பகுதி மக்களால் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.
அருட்தந்தைகள் பொது மக்கள் உட்பட பலரும் இணைந்து உணர்வு பூர்வமாக குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
செய்தி: ஆஷிக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |