தீர்மானமிக்க இன்றைய நாள்! ரணிலுக்கு பிணையா - விளக்கமறியலா..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், பிணை வழங்கப்படுமா அல்லது விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்படுமா என்ற கேள்வி அரசியல் பரப்பில் எழுந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு இன்றுவரை(26) விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்றையதினம் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றில் முன்னிலையாவாரா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் தரப்பில் காணப்படுகின்றது.
நீதிமன்றில் முன்னிலையாவாரா ரணில்
கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு அதிகமாக இருப்பதால் அவரால் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலை ஏற்படும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்சான் பெல்லன தெரிவித்திருந்தார்.
எனினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தரப்பினர் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.
பிணையா விளக்கமறியலா..
மேலும், இன்றையதினம் முன்னாள் ஜனாதிபதிக்கு பிணை வழங்கப்படுமா அல்லது விளக்கமறியல் நீடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் மட்டத்தில் பரவலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ரணிலுக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தரப்பினர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளதுடன், ரணிலுக்கு ஆதரவாக ஒரு குழுவினர் இன்று கொழும்புக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும், நீதிமன்றத் தீர்ப்புக்களை விமர்சிக்கும் மற்றும் கேள்விக்குட்படுத்தும் பேரணிகளை நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது போன்ற கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்டவர்களும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அரசியல் பழிவாங்கலா...
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 40 வருடங்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிராகவும் எதிர்க்கட்சியினர் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அமைச்சரின் பிமலின் கருத்தின் ஊடாக இது ஒரு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்பது உறுதியாகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன், நாமல் ராஜபக்ச, சாகர காரியவசம் உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சார்ந்த பொதுஜன பெரமுன தரப்பினரும் ரணிலுக்கு எதிரான இந்த நடவடிக்கை திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்று வாதிடுகின்றனர்.
எனினும், நீதிமன்ற தீர்ப்புக்களுடன் அரசாங்கம் ஒருபோதும் தொடர்புபடுவதில்லை. ரணிலின் விடயத்தில் நீதித்துறை பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது என்று அரச தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.



