ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தீவிர சிகிச்சைப் பிரிவின் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற பரிந்துரை காரணமாக, இன்று (26) நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜூம் தொழில்நுட்பம் மூலம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சட்ட நடவடிக்கைகளுக்கு முன்னிலைப்படுத்த நீதவான் உத்தரவிட்டால், தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவரின் பரிந்துரையின் பேரில்
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
சம்பவம் தொடர்பாக கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவரின் பரிந்துரையின் பேரில், மறுநாள் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும். இருப்பினும், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, 5 சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு அவரைக் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதோடு, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்பட்டு, பயணப் பொதிகள் மற்றும் நபர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



