தமிழினப்படுகொலைக்கு தென்னிலங்கை சமூகம் மன்னிப்பு கோரியிருக்க வேண்டும் : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புத் தொடர்பாக தென்னிலங்கை சமூகம், தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று (18.05.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "2009ஆம் ஆண்டு மே மாதம், தமிழீழ தேசத்தை தென்னிலங்கை பௌத்த பேரினவாதப் பூதம் இனவழிப்பின் ஊடாக ஆக்கிரமித்துக் கொண்ட கொடூரமான நினைவுகளை தமிழீழ தேசம் உணர்வுபூர்வமாக நினைவுகூரும் நாளே இன்றாகும்.
நீடித்த நல்லிணக்கம் ஒன்றே உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கான உயர் கௌரவம் : ஆளுநர் நஸீர் அஹமட் வலியுறுத்தல்
பெரும்பான்மையினம்
இந்த படுகொலை சம்பவத்தின் போது குறைந்தது 70,000 மக்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால், இன்றுவரை, அது குறித்த எந்தக் கரிசனையும் தென்னிலங்கை தேசத்திடம் இருந்து எழவில்லை.
தென்னிலங்கை சமூகத்தின் எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்தோ அல்லது வலுமிக்க சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்தோ தமிழின அழிப்புத் தொடர்பாக எந்தவித வருத்தமும் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், பெரும்பான்மையினம், தமிழர் தேசத்தின் இருப்பை ஏற்றுக் கொண்டு அதனை அங்கீகரிக்காமல் இனக் கபளீகரம் செய்ய முற்படுகிறது.
அரசியல் தீர்வு
மேலும், அரசியல் தீர்வு என்று கபட நாடகம் ஆடிய வண்ணம் கட்டமைக்கப்பட்ட முறையில் இனவழிப்பைத் தொடர்கிறது.
எனவே, தமிழர் தேசம் தனக்கெனத் தனியானதொரு நாட்டை அமைப்பதன் மூலம் மட்டுமே தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற உண்மையை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு மட்டுமல்ல அதற்குப் பிந்திய காலமும் தெளிவாகச் சுட்டி நிற்கிறது.
அதேவேளை, முள்ளிவாய்க்கால் ஈகிகள் நினைவுடன் நம் தேச விடுதலைக்காகத் தொடர்ந்து உழைப்போம் என்று உறுதி கொள்வோம்” என கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |