நீடித்த நல்லிணக்கம் ஒன்றே உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கான உயர் கௌரவம் : ஆளுநர் நஸீர் அஹமட் வலியுறுத்தல்
நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையும் பாதுகாப்பதற்கு எவ்வித அச்சமும் இன்றி தன்னுயிர்களை உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு நாம் வழங்கும் உயர் கௌரவம் நீடித்த நல்லிணக்கம் ஒன்றே ஆகும் என வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் (Naseer Ahamed) வலியுறுத்தியுள்ளார்.
குருநாகல் (kurunegala) நகரில் இன்று (17.05.2024) நடைபெற்ற 15ஆவது தேசிய இராணுவ வீரர்கள் நினைவுதின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நினைவு நாள்
மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையும் பாதுகாப்பதற்கும் அச்சம், பயமின்றி நிம்மதியான முறையில் நாட்டு மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்துள்ளதோடு மேலும் பலர் அங்கவீனமுற்றுள்ளனர்.
இவ்வாறான நிலையில் நாட்டின் அனைத்து மக்களும் ஒரே குடும்பமாக, பிளவுகள் மற்றும் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து, நல்லிணக்கத்துடன் வாழ்வதுடன், முன்னைய இருண்ட யுகம் மீண்டும் ஏற்படாத வகையில் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்படுவதே ராணுவ வீரர்களின் உயிர்த்தியாகம் மற்றும் ஏனைய தியாகங்களைக் கௌரவிக்கும் வகையில் நம்மால் செய்யக் கூடிய ஒரே கை மாறாகும்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலனோம்புகைக்காக காணிகள் பகிர்ந்தளித்தல், வீட்டுத் திட்டங்களை நிர்மாணித்தல், படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவிகளை வழங்குதல் போன்ற விடயங்களை முன்னெடுத்துள்ளார்.
அதே வழியை நானும் பின்பற்றி வடமேல் மாகாணத்தில் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன் சார்ந்து செய்யக்கூடிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்..
தமிழர்களுக்கு உள்ள இடையூறு
தமிழர்கள்.தங்களின் இறந்து விட்ட மூதாதையரைக் கடவுளாக பாவனை செய்து வணக்கம் செலுத்தும் மரபினைப் பேணி வருகின்றனர்.
தமக்கான சுதந்திரமான வாழ்வுக்காக போராடி போரில் வீரச்சாவினை தழுவிய தங்கள் உறவுகளை நினைவு கொள்ளும் இவர்கள் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரால் அதிக இடையூறுகளுக்கு உள்ளாக்கப்படுவதையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாக அமையும்.
இந்நிலையில், இறந்தவர்களை நினைவு கொள்ளும் உரிமை எல்லோருக்கும் சமமாக வழங்கப்படல் வேண்டும் என்பது நோக்கத்தக்கது” என்றும் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், மாகாண சபை அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |