முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த தீர்த்த விழா
வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் விழாவிற்கான புனித தீர்த்தமெடுக்கும் நிகழ்வு நேற்றையதினம்(22.06.2026) பாரம்பரிய மரபுவழிச் சடங்குகளுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
வருடாந்தப் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆலயத்தில் மாலை வேளையில் தீர்த்தமெடுப்பதற்கான விசேட பூஜை மற்றும் மரபுவழிச் சடங்குகள் இடம்பெற்றுள்ளன.
தீர்த்தமெடுக்கும் நிகழ்வு
இதனைத்தொடர்ந்து, அடியவர்கள் கும்பம், மடைப்பண்டங்கள் மற்றும் தீர்த்தக்குடங்களுடன் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பாதை வழியாக வட்டுவாகல் கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.
அங்கு பாரம்பரிய வழிபாட்டு முறைகள் மற்றும் சமயச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், வருடாந்தப் பொங்கல் விழாவிற்கான புனித தீர்த்தம் வட்டுவாகல் கடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் புனித தீர்த்தம் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு பாதுகாப்பாக ஆலய வளாகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு எடுத்து வரப்பட்ட கடல் தீர்த்தம் வட்டுவாகல் சப்தகன்னியருக்கு தீபமேற்றும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், புனித தீர்த்தம் பயன்படுத்தப்பட்டு ஆலயத்தில் தொடர்ச்சியாக ஒருவார காலத்திற்கு தீபம் ஏற்றப்படவுள்ளதுடன், எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள வருடாந்தப் பொங்கல் விழாவும் பக்தர்களின் பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.



