நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி
எமக்கான நீதிகள் கிடைக்க பெறும் வரை சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை துக்க தினமாகவே அனுஷ்டிப்போம் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்தார்.
இன்று (10.12.2023) இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இன்றையதினம் மனித உரிமைகள் தினம் என்பதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை. தொடர்ச்சியாக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அடக்கு முறைகளுக்குள்ளே இருக்கின்றோம்.
அனைவருக்கும் மனித நேயம் கிடைக்க வேண்டும்
நீதிக்காக போராடுகின்றோம், நீதிக்கான பதில் கிடைக்கவில்லை. ஐக்கிய நாடுகளிடம், சர்வதேசத்திடம் கேட்டு நிற்கின்றோம். சர்வதேச மனித உரிமைகள் தினம் என்பது அனைவருக்கும் மனித நேயம் கிடைக்க வேண்டும் என்பதே.
இலங்கையில் அடக்குமுறைகள் செய்யப்பட்டு கொண்டு அதனை தாங்கள் மனித உரிமைகள் தினம் என கொண்டாடிக்கொண்டு இருப்பது போலித்தனமான நாடகம்.
தொடர்ச்சியாக நிலத்திற்காக, புதைகுழிக்காக, மாவீரர்களை நினைவு கொள்கிறார்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக போராடுகின்றோம், கைது செய்கிறார்கள் இவ்வாறு தொடர்ச்சியாக போராடி கொண்டே இருக்கின்றோம்.
எங்களுடைய உறவுகள் எப்போது கிடைக்கிறார்களோ, எங்களுக்கான நீதிகள் எப்போது கிடைக்க பெறுமோ அப்போது தான் நாங்கள் மனித உரிமைகள் தினம் என தலைநிமிர்ந்து நிற்போம்.
அதுவரை நாங்கள் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை துக்க தினமாகவே அனுஷ்டிப்போம். சர்வதேசத்தில் உள்ளவர்களும் நீதி தர முடியவில்லை.
உக்ரைனில் போர் நடைபெறுகின்றது. அதனை பார்த்து கண்ணீர் விடுகின்ற நிலையிலே ஐக்கிய நாடுகள் இருக்கின்றார்கள். இலங்கையில் தமிழர்களை கொலை செய்து கிடங்கில் போடும் வரை ஐக்கிய நாடுகள் பார்த்து கொண்டிருந்தார்கள் அந்த நேரம்தான் விட்டிருந்தாலும் தற்போது உறவுகள் நீதி கேட்டு நிற்கும்போது ஏன் தயங்குகின்றார்கள் என்பது எமக்கு கேள்விக்குறியாக உள்ளது.
எமக்கான உரிமைகளை பெற்றுத்தர வேண்டும். தொடர்ச்சியாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை பெற்றுத்தரும்வரை நாம் எமது உரிமைக்காக போராடுவோம் என மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |