வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்ட190 பில்லியன் ரூபாய் : இரு சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க FCID ஆட்சேபனை
இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி, சட்டவிரோதமாக 190 பில்லியன் ரூபாய் பணம் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படும் வழக்கில், ஜிப்ரி மொஹமட் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று உத்தரவிட்டார்.
முதலாம் மற்றும் எட்டாம் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதற்கு எதிராக நிதி குற்ற விசாரணைப் பிரிவு (FCID) நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்துள்ளது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பரிவர்த்தனைகள்
மேலும், விசாரணைக்குட்பட்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பரிவர்த்தனைகள் தொடர்பான இறுதி மதிப்பீட்டு அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக FCID தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஆரம்பிப்பதில் பங்களித்த நபர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.
நிறுவனங்களுக்கும் வங்கி அதிகாரிகளுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினரதும் சமர்ப்பிப்புகளைக் கருத்திற்கொண்ட நீதவான், பிணை தொடர்பான உத்தரவை நவம்பர் 12ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளாார்.
இதனையடுத்து, இரு சந்தேகநபர்களும் அன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.