அரச வங்கிகள் குறித்து கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அமைச்சர்
நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைய மத்திய வங்கியே பிரதான காரணமாகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அஜித் நிவாட் கப்ரால் ஆளுநராக இருந்த காலத்தில் இருந்து நாட்டின் அந்நிய செலாவணி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்தது. அதனால் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு மத்திய வங்கியின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாமல்போனது.
அரச வங்கிகள் குறித்து கடும் குற்றச்சாட்டு
அரச வங்கிகள் சாதாரண மக்கள் தொடர்பில் கண்டுகொள்வதில்லை. அதனால் தான் அந்த மக்கள் கறுப்பு வியாபாரிகளை நாடி, தங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு பாரிய வட்டித்தொகைக்கு கடன் பெறுகின்றனர்.
இதனால் சாதாரண வியாபாரிகள் விவசாயிகள் தங்களின் தொழிலில் நட்டம் ஏற்படும்போது அவர்கள் அந்த தொழிலை விட்டுவிடும் நிலைக்கு செல்கின்றனர். அதனால் தான் இன்று நாட்டில் விவசாயம் செய்பவர்களின் வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதனால் இது தொடர்பாக மத்திய வங்கி கொள்கை ரீதியில் இது தொடர்பாக தீர்மானம் மேற்கொண்டு அதனை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் அது தொடர்பான சட்டங்களை அனுமதித்துக்கொள்ள எமக்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
மத்திய வங்கிக்கு நிதி தொடர்பான அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அதனால் இன்னும் தாமதிக்காமல் மத்திய வங்கி இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் நாடு வீழ்ச்சியடைய பிரதான காரணம் மத்திய வங்கியாகும். இதற்கு 90 வீதம் மத்திய வங்கியின் நடவடிக்கையே காரணமாகும். 10 வீதம் மற்ற விடயங்களாகும்.
வெளிநாட்டு செலாவணி
2006 இல் மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டது முதல் எமது வெளிநாட்டு செலாவணி முற்றாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்தது. அதனால் வெளிநாடுகளில் இருக்கும் எமது தொழிலாளர்கள் பாரியளவில் வெளிநாடுகளில் வியாபாரம் செய்து, அங்கு சேமித்து வைத்துக்கொண்டுள்ளார்கள்.
நாட்டுக்கு பணம் அனுப்பவில்லை. அதனால் எந்தவொரு நாடும் வெளிநாட்டு செலாவணியை நிர்வகித்துக்கொள்ள தவறினால் அந்த நாடு தோல்வியடையும். அதுதான் எமக்கும் ஏற்பட்டது. எமது வெளிநாட்டு செலாவணியை முகாமைத்துவம் செய்ய மத்திய வங்கிக்கு முடியாமல் போனது.
சிறிமா அம்மையாரின் காலத்தில் வெளிநாட்டு செலாவணி மோசடி ஆணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு, அதில் குற்றவாளியாக்கப்பட்ட அனைவரையும் சிறையிலடைத்தார்.சிலர் சிறையிலேயே மரணித்தார்கள். அதனால் நாட்டின் நிதி முகாமைத்துவம் தொடர்பாக மத்திய வங்கி சுயாதீன நிறுவனமாக செயற்படும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
அதற்கு முன்னர் மத்திய வங்கி அது தொடர்பான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முறையான நிதி முகாமைத்துவம் இல்லாமையே கறுப்பு சந்தை நிதி நிறுவனங்கள் அதிகரிக்க காரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |