கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இராணுவ விமானம் விபத்து: உயர்மட்ட தளபதிகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் தென்மேற்குப் பகுதியில் இராணுவ விமானமொன்று குடியிருப்புப் பகுதியொன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிக்விட் நகரத்திலிருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கிப் பயணித்த இந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, குவாங்கோ மாகாணத்திலுள்ள கெங்கே பகுதியில் தரை இறக்க முயற்சித்தபோதே இவ்வாறு விபத்து சம்பவித்துள்ளது.
கெங்கே பகுதியில் விமான ஓடுபாதை இல்லாத நிலையில், கட்டுப்பாட்டை இழந்த விமானம் குடியிருப்புக் காணியொன்றில் வீழ்ந்து தீப்பற்றி எரிந்துள்ளது.
17 பேர் உயிரிழப்பு
விபத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 16 பெரியவர்களின் சடலங்களும் குழந்தை ஒன்றின் சடலமும் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இராணுவ நீதிமன்ற முதன்மைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜோசப் முடோம்போ மற்றும் இராணுவ கணக்காய்வாளர் நாயகம் லெப்டினன்ட் ஜெனரல் லூசியன்-ரெனே லிகுலியா ஆகிய இரு உயர்மட்ட தளபதிகளும் அடங்குவதாக கொங்கோ இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிவதற்குத் தேவையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஃபெலிக்ஸ் சிசெகெடி உத்தரவிட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri