மிச்செல் பெச்லெட்டின் அறிக்கை யுத்தத்துடன் தொடர்புடையது அல்ல!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், ஆணையாளரினால் இலங்கை உள்ளடங்கலாக மனித உரிமைகள் மிக மோசமடைந்திருக்கும் நாடுகள் தொடர்பில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பகீர் மார்க்கர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை பொறுத்தவரையில் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட வாய்மூல அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பெரும்பாலான விடயங்கள் இறந்த காலத்துடன் தொடர்புடையவை அல்ல. மாறாக நாட்டில் தற்போது இடம்பெறும் விடயங்கள் பலவும் அவரது அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் ஜனநாயகக்கோட்பாடுகளின் சீர்குலைவு மற்றும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அப்போதைய அரசாங்கம் அதனை சிறுபான்மையினரை மாத்திரம் மையப்படுத்திய பிரச்சினையாக வரையறுத்தது.
அது மாத்திரமன்றி தேசப்பற்று தொடர்பில் பேசி, தெற்கில் வாழும் மக்களின் மனங்களில் அதற்கெதிரான நிலைப்பாடொன்றைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது அரசாங்கத்தினால் அதனைச் செய்யமுடியாது.
ஏனெனில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் விடயங்களில் 90 சதவீதமானவை சிவில் யுத்தத்துடன் தொடர்புடையவையல்ல. மாறாக அவை நாட்டின் நிகழ்கால நிலவரங்களை மையப்படுத்தியவையாகும்.
எனவே எமது நாட்டின் பிரஜைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தலையீடு செய்ய வேண்டிய நிலையேற்பட்டிருப்பதென்பது எமது நாட்டிற்கு அகௌரவத்தை ஏற்படுத்தக்கூடிய விடயமாகும். சில தினங்களுக்கு முன்னர் இலங்கை பிரஜைகள் இத்தாலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
எனவே எமது நாட்டில் மனித உரிமைகளும் ஜனநாயகமும் புறக்கணிக்கப்படுகின்றமையானது எமது நாட்டின் பிரஜைகள் சர்வதேசத்தை நோக்கித் தள்ளப்படுவதற்கான பிரதான காரணமாகும்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், காணாமல்போனோரின் குடும்பத்தினர் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுதல் மற்றும் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படல் குறித்தும் மேலும் பல்வேறு மனித உரிமை மீறல் அல்லது ஜனநாயகவிரோத செயற்பாடுகள் குறித்தும்அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இப்போது தேசப்பற்று தொடர்பில் பேசி அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
சர்வதேசத்திற்கு வெளிவிவகார அமைச்சு கடும் தொனியில் கூறியுள்ள பதில்
கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பது தேசத்தின் கடமை - ஐக்கிய நாடுகள் சபை
மனித உரிமைகள் உயஸ்தானிகர் அறிக்கையின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஒப்புவித்துள்ளதாக குற்றச்சாட்டு