மெஸ்ஸியின் முடிவை மாற்றிய உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி!
உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்தும் தான் விளையாடவுள்ளதாக அந்த அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
2022 உலகக் கிண்ண இறுதிப்போட்டியே தனது கடைசி உலகக் கிண்ணப் போட்டியாக அமையும் என ஆர்ஜென்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி கடந்த அக்டோபரில் தெரிவித்திருந்தார்.
ஆனால், அவர் தொடர்ந்தும் சர்வதேச போட்டியில் விளையாடுவாரா என கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற பிரான்ஸுடனான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய 35 வயதான லியோனல் மெஸ்ஸி கால்பந்து அரங்கிலிருந்து தான் ஓய்வு பெறப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண வெற்றிக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.
உலக சாம்பியனாக விளையாட விரும்புகின்றேன்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளில் விளையாட விரும்புகின்றேன்.
இந்த போட்டியுடன் எனது தொழிற்சார் வாழ்க்கையை நிறைவு செய்ய விரும்பினேன். இதைவிட வேறு எதையும் என்னால் கேட்முடியாது. இறைவனுக்கு நன்றி, அவர் அனைத்தையும் எனக்கு கொடுத்துள்ளார். இது போன்று எனது தொழிற்சார் வாழ்க்கையை நிறைவு செய்வது அற்புதமானது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா மற்றும் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடர்களில் அவர் பங்கேற்கவுள்ளார்.
ஒவ்வொரு சிறு பிள்ளையினதும் கனவாக உலகக் கிண்ணம் உள்ளது. நான் தவறவிட்ட அனைத்தையும் இங்கு அடைவதற்கு எனது அதிஷ்டம் கிடைத்துள்ளது எனவும் மெஸி கூறியுள்ளார்.
மெஸ்ஸியும் கால்பந்தும்...!
லியோனல் மெஸ்ஸி முதன்முதலில் 2005 இல் ஆர்ஜென்டினா அணிக்காக விளையாடினார்.
அவர் 2006 ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை எதிர்கொண்டார். அத்துடன், 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் வென்றார்.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற சுற்றுப்போட்டியின் மிகச் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.