ஜனாதிபதியிடமிருந்து விலகிய நாடாளுமன்றத்தின் பெறும்பான்மை உறுப்பினர்கள்: கோவிந்தன் கருணாகரன்
ஜனாதிபதியுடன் இருந்த 30க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகிச் சென்றுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசி எவ்வாறு ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்கமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, திருப்பழுகாமத்தில் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப்பேசுகின்றேன் என்று எங்களை அழைத்து எங்களை பகடைக்காய்களாக மாற்றி சர்வதேச அழுத்தங்களை குறைப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறான நாடகத்தினை நடாத்துகின்றார் என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகியிருக்கின்றது.
இதேபோல சர்வ கட்சி மாநாட்டை கூட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. சர்வ கட்சி மாநாடும் ஒன்றுதான் நாடாளுமன்றமும் ஒன்றுதான். அதில் பங்குபெறுவது குறித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள்
ஜனாதிபதி தமிழ் மக்களுக்கான தீர்வுக்கான ஒரு பேச்சுவார்த்தையினை நடத்தவேண்டுமானால் முதலில் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினையுள்ளது அதற்கு தீர்வு வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏற்றுக்கொண்டன பின்னரே அரசியல் தீர்வு குறித்து பேசமுடியும்.
சர்வதேசத்தின் பங்களிப்புடன் பேசுவது என்றாலும் மற்றும் தமிழ் மக்களுக்குத் தீர்வு வேண்டும் என்றாலும் இந்த நாட்டு அரசாங்கத்துடன்தான் பேசவேண்டும். அவர்களுடன் பேசினால்தான் எமது நோய்க்கு நிவாரணியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அந்த நிவாரணியை வழங்கக்கூடிய மனநிலையில் ஜனாதிபதி இல்லை.
மாறி மாறி இந்த நாட்டை ஆட்சிசெய்யும் அரசாங்கங்கள் உரிமையற்ற நிலையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழினத்தின் நோய்க்கு நிவாரணத்தினை வழங்கமுடியாத அரசியல் தலைவர்களாகவும் உள்ளனர். இந்த ஜனாதிபதி ஆட்சிக்காலத்திலாவது எமது நோய்க்கான மருந்து கிடைக்குமா என்ற ஏக்கத்துடனேயே நாங்கள் இருக்கின்றோம்.
இன்று இலங்கை அரசாங்கத்திற்குப் பல வழிகளில் அழுத்தங்கள் இருக்கின்றது. இந்த நாட்டின் ஜனாதிபதி தான் ஒரு பௌத்த ஜனாதிபதி, 69இலட்சம் சிங்கள மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி என்று கூறிவரும் நிலையில் 69 இலட்சம் சிங்கள மக்களும் ஏன் இவருக்கு வாக்களித்தோம் என்று கூறுகின்ற நிலைமை இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் இந்த நோயிலிருந்து விடுபட்டு நிவாரணம் பெறுவதற்காக அழைத்திருக்கின்றார். தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாகயிருந்து தமிழ் மக்களின் அரசியல் ரீதியான நிவாரணம் தொடர்பிலேயே நாங்கள் சிந்தித்துவருகின்றோம்.
ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருடங்களைக் கடந்துள்ள போதிலும் எந்தவிடத்திலும் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினையிருக்கின்றது என்று கோரவில்லை. அவ்வாறனவொருவர் ஏன் அரசியல் தீர்வு குறித்து பேசவேண்டும் என்பதே எமது கேள்வியாகும்.
ஒரு அரசியல் தீர்வினை இந்த நாடாளுமன்றம் ஊடாக கொண்டுவரவேண்டுமானால், அரசியலமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டுமானால் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையிருக்கு வேண்டும். ஜனாதிபதியுடன் இருந்த 30க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகிச்சென்றுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் இல்லை.
ஜனாதிபதியினால் ஒரு அரசியலமைப்பினை கொண்டுவரமுடியாத நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசி எவ்வாறு ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்கமுடியும். அவருடன் பேசுவதன் மூலம் எந்த விடயமும் நடைபெறப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.





விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri